சென்னையில் விரைவில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம்: அமைச்சர் மெய்யநாதன்

சென்னையில் விரைவில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம்: அமைச்சர் மெய்யநாதன்
X

வயலோகத்தில் நெடுந்தூர ஓட்டத்தை தமிழக விளையாட்டுத்துறை மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னையில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், பெருமாநாடு அருகே உள்ள சுதர்சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பாரதிதாசன் பல்கலைகழகம் இணைந்து நடத்திய நெடுந்தூர ஓட்டம் வயலோகத்தில் நடைபெற்றது.

ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனியாக நடைபெற்ற நெடுந்தூர ஓட்டத்தை, தமிழக விளையாட்டுத்துறை மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நெடுந்தூர ஓட்டத்தில் புதுக்கோட்டை, திருச்சி, கரூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 19 கல்லூரிகளிலிருந்து 36 மாணவர்கள், 24 மாணவிகள் என மொத்தம் 60 மாணவர்கள் பங்கேற்றனர்.

வயலோகத்திலிருந்து தொடங்கிய இந்த நெடுந்தூர ஓட்டம் 10 கிமீ தூரம் நிர்ணியிக்கப்பட்டு பெருமநாடு சுதர்சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிறைவடைந்தது.

இந்த நெடுந்தூர ஓட்டத்தில் ஆண் பெண் இருபாலரிலும் முதல் 6 இடங்களில் வந்து வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. இந்த நெடுந்தூர ஓட்டத்தை சாலைகளின் இருபுறங்களிலும் நின்ற பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், தமிழக முதலமைச்சரின் 9 மாத கால ஆட்சியில் விளையாட்டுதுறைக்கு பல்வேறு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. கல்வி பயிலும் மாணவர்கள் விளையாட்டுத் துறையில் இட ஒதுக்கீடு மூலம் அரசு மற்றும் தனியார் துறைகளின் வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி கொரோனா பெருந்தொற்று காலத்திலும் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ள விளையாட்டு பெரும் அங்கம் வகிக்கின்றது.

சென்னையில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. உலகத் தரம் வாய்ந்த மைதானத்தை அமைக்க விளையாட்டுத் துறை சார்ந்த அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு வருகின்றனர். விளையாட்டு மைதானம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்ட அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது என்று பேசினார்.

Tags

Next Story