புதுக்கோட்டை, விராலிமலையில் சடலத்துடன் சாலை மறியல் : பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
விராலிமலையில் சடலத்தை நடுரோட்டில் வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபடும் உறவினர்கள்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே சடலத்தை இடுகாடு தனக்குச்சொந்தமான பட்டா இடம் என்று கூறிய அடக்கம் செய்ய எதிர்ப்புத்தெரிவித்த நபரைக்கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள கல்குடியை சேர்ந்தவர் பழனிசாமி முன்னாள் அதிமுக ஒன்றிய குழு உறுப்பினரான இவரது மகன் மணிகண்டன்(21) தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவலறிந்த விராலிமலை போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, சடலத்தை அடக்கம் செய்வதற்காக ஏற்கெனவே பல ஆண்டுகளாக அடக்கம் செய்து வந்த கல்குடியில் உள்ள இடுகாட்டில் எரியூட்டுவதற்கான முன்னேற்பாடுகளை உறவினர்கள் இன்று மேற்கொண்ட போது அவர்களை தடுத்த அப்பகுதியை சேர்ந்த செல்லமுத்து என்பவர் இந்த இடம் தனக்கு சொந்தமான இடம் என்றும் பட்டா என் பெயரில் உள்ளது என்றும் இதற்கு முன்னர் இந்த இடத்தில் நீங்கள் சடலத்தை அடக்கம் செய்திருக்கலாம். ஆனால் இனிமேல் இந்த இடத்தில் சடலத்தை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்று கூறி அவர்களை தடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு விராலிமலை வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள காமராஜர் நகர் சாலையில் அமர்ந்தனர். தொடர்ந்து உடற்கூறு ஆய்வு முடித்து கொண்டுவரப்பட்ட மணிகண்டன் சடலத்தை வேனிலிருந்து இறக்க போராட்டக்காரர்கள் முயன்றபோது போலீசார் அதை தடுத்தனர். இதைத் தொடர்ந்து சடலத்துடன் இருக்கும் வண்டியை நகர்த்த விடாமல் சாலையின் நடுவே நிறுத்தியும் சாலையில் அமர்ந்தும் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் அருள்மொழி அரசு, வட்டாட்சியர் சதீஷ் சரவணகுமார் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அதனை செவிமடுக்காமல் தனியார் பெயரில் உள்ள பட்டாவை ரத்து செய்து கொடுத்தால் மட்டுமே கலைந்து செல்ல முடியும் எனக் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை அடுத்து நிகழ்விடத்துக்கு வந்த கோட்டாட்சியர் தண்டாயுதபாணி மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்ச்சு வார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகக்கூறினார். இதை அடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu