புதுக்கோட்டை: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆட்சியர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆட்சியர் கவிதா ராமு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்த ஆட்சியர் கவிதா ராமு.
புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூர் மற்றும் அன்னவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது;- தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழகம் முழுவதும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து அதிக அளவில் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக 69 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இம்மையங்கள் மூலமாக விவசாயிகள் விளைவித்த நெல்லினை இணையதளம் வாயிலாக பதிவு செய்து, நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் விவசாயிகள் இடைதரகர்களின்றி தங்கள் நெல்லினை நேரடி நெல் கொள்முதல்.நிலையம் மூலம் காலதாமதமின்றி விற்பனை செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூர் மற்றும் அன்னவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்து, விவசாயிகளிடமிருந்து காலதாமதமின்றி, சரியான எடை அளவில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு, விவசாயிகளிடமிருந்து அதிக அளவில் நெல் கொள்முதல் செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் அனைவரும் தாங்கள் விளைவித்த நெல்லினை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, உதவி இயக்குநர் (வேளாண்மை) பழனியப்பன், வட்டாட்சியர் முத்துகருப்பன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu