சொந்தச் செலவில் 10 கிலோ அரிசிப்பை மாணவர்களுக்கு வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்..!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்தைச் சேர்ந்த கவரபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சார்பாக ரூ 50 ஆயிரம் மதிப்பில் இலவசமாக 10 கிலோ அரிசிப்பை வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளித்தலைமையாசிரியை விசாலாட்சி,இடைநிலை ஆசிரியைகள் மீனா,அழகுமணி,காவேரியம்மாள், ஆசிரியர் பெஞ்சமின் ஆகியோர் செய்திருந்தனர்.
இது குறித்து அப்பள்ளியின் இடைநிலை ஆசிரியை மீனா இராமநாதன் தெரிவித்ததாவது:
இந்த கொரோனா காலகட்டத்தில் உலகமே பொருளாதார ரீதியாக சரிந்துகொண்டிருக்கக்கூடிய காலகட்டத்தில் கூலி வேலை பார்க்கக்கூடிய கிராமத்து மக்களின் நிலைமை சொல்லில் அடங்காது. நாங்கள் கிராமத்தில் பணிபுரிவதால் எங்களால் அவர்களது கஷ்டங்களை நன்கு உணரமுடியும். ஆனால் எந்த ஒரு விளக்கிற்கும் தூண்டுகோல் வேண்டும் என்பதுபோல இந்த கடினமான காலகட்டத்தில் எங்கள் அருகாமைப் பள்ளியான பாட்னாபட்டி தொடக்கப்பள்ளியில் ஒரு வாரத்திற்கு முன்னதாக அங்குள்ள மூன்று ஆசிரியர்களும் இணைந்து மாணவர்களுக்கு அரிசி வழங்கினார்கள். அதை அறிந்தவுடன் எங்களுக்கும் நம்மால் இயன்றதை நமது மாணவர்களுக்குச் செய்ய வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. அதோடு நம்மைப் பார்த்து இன்னும் சிலருக்கு இதே போல் நாமும் ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் தோன்றலாம். என்ன செய்யலாம் என்று நாங்கள் யோசித்த போது இந்த நேரத்தில் உணவுப்பொருளே பிரதானமாக தெரிந்தது. ஆகையால் நாங்களும் அதையே மாணவர்களுக்கு வழங்க முடிவெடுத்தோம். அந்த வகையில் எங்கள் பள்ளியில் பயிலும் 126 குழந்தைகள், பள்ளியின் தூய்மைப்பணியாளர், சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர்களுக்கும் இன்றைய தினம் 10 கிலோ வீதம் ரூ 50 ஆயிரம் மதிப்புள்ள அரிசி வழங்கப்பட்டது. பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டதைப் பார்த்த எங்களுக்கும் மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டானது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu