ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு: சோகத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. உறுப்பினராக உள்ளார். இவர் சிறந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர் ஆவார். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ப வைப்பதற்காக தனது வீட்டில் காளை மாடுகளை வளர்த்து வருகிறார்.
இவர் வளர்ந்து வரும் காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று பரிசுகளை குவித்து வருவது உண்டு. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வடசேரி பட்டியில் கடந்த 2ஆம் தேதி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து வெளிவரும் போது இவரது ஜல்லிக்கட்டு காளை கருப்பு கொம்பன் முன்னால் இருந்த கம்பத்தில் முட்டி மயங்கியது.
உடனடியாக அந்த காளைக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை கருப்பு கொம்பன் பரிதாபமாக உயிரிழந்தது.
இறந்த கருப்பு கொம்பன் காளை 300க்கும் மேற்பட்ட வாடிவாசலில் களம் கண்டு வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விஜயபாஸ்கரின் புகழ் பெற்ற கொம்பன் காளை 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து வெளியே வந்த போது கம்பத்தில் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கொம்பன் காளை மறைவினால் சோகத்தில் இருந்த விஜ பாஸ்கரன் கருப்புக்கொம்பன் மூலம் சற்று மனதை தேற்றிக்கொண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆர்வமாக இருந்து வந்தார். இந்த நிலையில் கருப்பு கொம்பனும் தற்போது உயிரிழந்தது அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பு கொம்பன் ஜல்லிக்கட்டு காளைக்கு விஜயபாஸ்கர் கண்ணீர் மல்க குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் இலுப்பூர் அருகே ஓலைமான் பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் கருப்பு கொம்பன் ஜல்லிக்கட்டு காளை உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu