இறையூர் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த கொடுமை: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

இறையூர் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த கொடுமை: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
X

இறையூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கவிதா ராமு

இறையூர் கிராமத்தில் தலித் மக்களுக்கான குடிநீர்த்தொட்டியில் மலம் கலந்த கொடுமையைத் தொடர்ந்து அங்கே நிகழும் தீண்டாமைக் கொடுமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் தலித் மக்களுக்கான குடிநீர்த்தொட்டியில் மலம் கலந்த கொடுமையைத் தொடர்ந்து அங்கே அடுக்கடுக்காக நிகழும் தீண்டாமைக் கொடுமைக்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்ட அதிகாரிகள், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் செவ்வாய்க்கிழமையன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சி, இறையூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் திங்கள்கிழமை மலம் கலந்த கொடுமை தெரியவந்தது. இச்சம்பவம் பத்திரிகை, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் மூலமாக வெளிச்சத்திற்கு வரவே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்திற்கு அதிகாரிகளுடன் விரைந்துசென்ற கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சின்னத்துரை, நடந்த சம்பவம் குறித்து உரிய நடவடிகை எடுக்குமாறும், அப்பகுதி மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருமாறும் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

உடனடியாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் உள்ள அசுத்தமான தண்ணீரை வெளியேற்றி வேறு குடிநீர் வழங்கப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், நடந்துள்ள சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதார ராமு உள்ளிட்ட அதிகாரிகள், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் இறையூர் கிராமத்திற்குச் சென்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.


"நாங்கள் தலித் மக்கள் என்பதால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறோம். இங்குள்ள ஐயனார் கோவிலில் இதர சமூகத்தினரைப்போல எங்களை கருவறை அருகில் சென்று வழிபட அனுமதிப்பதில்லை. இங்குள்ள தேநீர் கடைகளில் எங்களுக்கு தனிக் குவளையில்தான் டீ கொடுக்கின்றனர். மயானத்திற்குச் செல்ல சாலை வசதி இல்லை. தெருவிளக்குகள் எரிவதில்லை. பல ஆண்டுகளுக்கு மேல் கட்டப்பட்ட வீடுகள் வசிக்க முடியாத அளவுக்கு மிகவும் பழுதடைந்துள்ளது. எங்கள் குடியிருப்பு அருகில் உள்ள வரத்து வாய்க்கால் தூர்வாரப்படாததால் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தில் எங்களுக்கு முறையாக வேலை வழங்குவதில்லை என அடுக்கடுக்காக குற்றம்சாட்டினர்.

மேலும் அவர்கள் கூறுகையில், தற்பொழுது குடிநீரிலும் மலத்தைக் கலந்துள்ள சம்பவம் எங்களை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது என கண்ணீர்மல்க தெரிவித்தனர்.


இதனைத் தொடர்ந்து பழுதடைந்த வீடுகளை விரைந்து செப்பனிடவும், வரத்துவாரிகளை தூர்வாரவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மயான சாலை அமைக்கவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதனிடையே இரட்டைக்குவளை முறை கடைப்பிடிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்ட தேநீர்கடையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், அங்கு தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவது தெரிய வந்ததைத் தொடர்ந்து தேநீர்கடை உரிமையாளர் மூக்கையா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டார்.

அங்குள்ள ஐயனார்கோவிலில் பட்டியல் இன மக்கள் சாமி கும்பிட அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்ததை அடுத்து அவர்களை அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கோவிலுக்குள் சென்றார். கோவிலுக்குள் நுழைந்து பட்டியல் இன மக்களை சாமி கும்பிட வைத்தார்;. மேலும், அங்குள்ள இதர சமூகத்தினரிடமும் பட்டியல் இன மக்கள் கோவிலுக்குள் உள்ளே சென்று சாமி கும்பிட மறுப்பது சட்டப்படி குற்றம் எனவும் அறிவுறுத்தினார்.

அப்போது, அங்கு சாமி ஆடுவது போல ஆடி தலித் மக்களை இழிவாகப் பேசிய லெட்சுமணன் மனைவி சிங்கம்மாள் மீது கோவிலில் தலித் மக்களை நுழைய விடாமல் தடுத்ததாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


இதுகுறித்து கருத்துத் தெரிவித்த சிபிஎம் மாவட்டச் செயலாளர் கவிவர்மன், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை கொடுமைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பதை எங்கள் கட்சியின் சார்பில் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறோம். தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் மூலமாகவும், ஆதாரங்களில் அடிப்படையிலும் நிரூபித்து வருகிறோம். ஆனால், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இதுகுறித்து எந்த அக்கறையும் செலுத்துவதில்லை. பிரச்சினைகள் பெரிதாக வெடிக்கும் போது மட்டும் கண்துடைப்பாக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பகுதிகளில் சில மாதங்கள்கூட நீடிப்பதில்லை. அங்கே தீண்டாமைக் கொடுமைகள் பழையபடி அரங்கேற்றப்படுகிறது.

எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இதுகுறித்து உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமைகள் எங்கெல்லாம் உள்ளது என்பதை தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இதற்கு சரியான தீர்வை எட்ட முடியும் என்றார்.

மேலும் அங்கு குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்துள்ளவர்களை விரைவாக கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட வேண்டும். இங்குள்ள பட்டியில் இன மக்கள் அமைதியாக வாழ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்தஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.ச.இராமகணேசன் உள்ளிட்ட அதிகாரிகளும், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சண்முகம், அன்புமணவாளன், மதியழகன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் சலோமி, செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Next Story
ai solutions for small business