அரசு பள்ளிகளை ஆய்வு செய்த மாவட்ட இணை இயக்குநர் சி.செல்வராஜ்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள கொடும்பாளூர் அரசு பள்ளியில் ஆய்வு செய்த பணிகள் இணை இயக்குனர் செல்வராஜ்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9,10,11,12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதையொட்டி பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள பள்ளிகள் இணை இயக்குநர் சி.செல்வராஜ் ஆய்வு செய்தார்.
முதலில் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் உள்ள கொடும்பாளூர் அரசு மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளி திறக்கும்போது மேற்கொள்ள வேண்டிய அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து ஆசிரியர்களும் தெரிந்துள்ளனரா என்பது குறித்து கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து அங்கு வகுப்பறைகள், மேஜைகள் அனைத்தும் சுத்தமாக உள்ளதா என்பது பற்றியும், கழிப்பறைகள் மாணவர்கள் பயன்படுத்தும் விதத்தில் உள்ளனவா என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.
பின்னர் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மாணவர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தினார். ஆசிரியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்களா அதற்கான சான்றுகளை தலைமையாசிரிடம் சமர்பித்துள்ளனரா என்பது குறித்தும் பார்வையிட்டார் .
பள்ளி திறந்த 45 நாட்களுக்கு மாணவர்களுக்கு பயிற்சி கட்டகம் மூலம் கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்களை அறிவுறுத்தினார். பின்னர் பள்ளியில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை,அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வகுப்பறைகளின் எண்ணிக்கை, மாணவர்களுக்கு வகுப்பு நடைபெறும் நாட்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர் விராலிமலை அரசு ஆண்கள்,பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் இலுப்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகள் இணை இயக்குநர் செல்வராஜ், தமிழக அரசின் உத்தரவுப்படி நாளை செப்டம்பர் 1 ஆம் தேதி (புதன்கிழமை) முதல் 9,10,11,12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அதனால் பள்ளிகள் திறப்பு குறித்த முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு உத்தரவிற்கிணங்க ஆய்வு மேற்கொள்ள புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்துள்ளேன்.
இங்குள்ள பள்ளிகள் அனைத்தும் நல்ல முறையில் சுத்தமாக இருந்தது. அனைத்து பள்ளிகளிலும் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளித்திறப்பிற்கு தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் சண்முகநாதன் மற்றும் பள்ளிகளின் தலைமையாசியர்கள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu