மாற்றுத்திறனாளி இளைஞரை தாக்கிய போலீஸார் 3 பேர் பணியிடை நீக்கம்: எஸ்பி அதிரடி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மாற்றுத்திறனாளி இளைஞர் சங்கர் காவல்துறையினர் அடித்ததில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்
மாற்றுத்திறனாளி இளைஞரை அடித்து காயப்படுத்திய மூன்று போலீஸாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கவரப்பட்டியை சேர்ந்த மாணிக்கம் மகன் சங்கர். இரு கண்களும் தெரியாத பார்வையற்ற மாற்றுத்திறனாளியான சங்கர் பல்வேறு சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்நிலையில் தனது கிராமமான கவரப்பட்டியில் சட்டவிரோதமாக சிலர் மது விற்பனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். மேலும் அங்கு மது வாங்கி குடிக்கும் சிலர் அவ்வழியே பள்ளி செல்லும் மாணவிகளுக்கு தொல்லை கொடுத்ததால் அந்த மாணவிகள் பாதிக்கப்பட்டதை அறிந்த சங்கர் இதுகுறித்து விராலிமலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து அவர் தங்கள் கிராமத்தில் நடக்கும் சட்டவிரோத மது விற்பனையை தடுக்குமாறு தொலைபேசி மூலம் புகார் அளித்து வந்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த விராலிமலை காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் நேற்று காலை கவரப்பட்டிக்கு சென்று அங்கு வீட்டில் இருந்த சங்கரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.
மேலும் காவல் நிலையத்தில் வைத்து சங்கரை-செந்தில், அசோக்,பிரபு ஆகிய மூன்று காவலர்கள் கடுமையாக பேசியதோடு லத்தியால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாற்றுத்திறனாளி சங்கரை காவல் துறையினர் காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர்.இதன் பின்னர் காவல் நிலையத்திற்கு வெளியே வந்த சங்கர் மேல் நடக்க முடியாமல் மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சங்கரின் தாயார் மாரியாயிக்கு நேற்று மாலை தான் தனது மகனை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர் காவல் நிலையம் வந்து பார்த்தபோது அங்கு சங்கரை காணாத நிலையில் அருகே உள்ள ஒரு கோயில் அருகே அவர் மயங்கிய நிலையில் உடலில் காயங்களோடு கிடந்துள்ளார்.இதனை அடுத்து சங்கரை உடனடியாக விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது தாயார் மரியாயி அனுமதித்துள்ளார்.
இந்நிலையில் தான் இந்த சம்பவம் குறித்து அறிந்த வழக்கறிஞர் பழனியப்பன் என்பவர் இதுகுறித்து திருச்சி ஐஜி பாலகிருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டதன் அடிப்படையில் புதுக்கோட்டை எஸ்பி நிஷா பார்த்திபன் இன்று காலை 3 காவலர்களையும் ஆயுதப்படைக்கு பணிமாற்றம் செய்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் காவல்துறையினரின் அத்துமீறல்கள் குறித்து கேள்விகளையும் எழுப்பிய நிலையில் மாற்றுத்திறனாளி சங்கரை தாக்கிய செந்தில், அசோக்,பிரபு ஆகிய மூன்று காவலர்களையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார். மாற்றுத்திறனாளி இளைஞரை மூன்று காவலர்கள் அடித்து காயப்படுத்திய சம்பவம் விராலிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu