ஆசிரியர்களுக்கான கணினி அடிப்படை பயிற்சியினை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பார்வையிட்டு திடீர் ஆய்வு..
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சியினை ஆய்வு செய்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமிசத்தியமூர்த்தி.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரசு துணைப்பொதுத் தேர்வினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும், முதுகலை ஆசிரியர்களுக்கான முதற்கட்ட 5 வது நாள் பயிற்சியினை முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பார்வையிட்டார்.
பயிற்சி குறித்து முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது : புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 526 முதுகலை ஆசிரியர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.இதன் நோக்கம் தமிழக அரசால் 6029 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தை முழுவதும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் நோக்கில் ஐந்து நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் கணினி பற்றிய அடிப்படை புரிதல், உயர்தொழில் நுட்ப கணினி ஆய்வகத்தில் உள்ள வன்பொருள், மென்பொருள், வகுப்பறையில் மின் திற நிகழ்த்தியை பயன்படுத்தும் முறை
(பவர்பாயிண்ட் பிரசண்டேசன்), எமிஸ் கல்வி மேலாண்மைத்தளத்தில் மாணவர்களின் வருகைப்பதிவு, சேர்க்கை, நீக்கம் போன்றவற்றை தெரிந்துகொள்ளுதல் போன்ற பல்வேறு வகுப்பறை சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர்களின் வருகைப்பதிவு தினமும் எமிஸ் தளம் மூலம் உறுதி செய்தல், அன்றாடம் பயிற்சியின் முடிவில் ஆசிரியர்களுக்கு தேர்வு மற்றும் ஒப்படைப்பு என இதுவரை அல்லாத அளவிற்கு பள்ளிக்கல்வித்துறையில் பல புதிய முயற்சியுடன் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கபட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்பயிற்சிக்காக சுமார் 50 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு 526 முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அந்தந்த மையங்களில் பயிற்சியை ஒருங்கிணைக்க 50 உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வக பொறுப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எழும் சந்தேகங்கள் மற்றும் பயிற்சியை வழிநடத்துவதற்கு 12 கருத்தாளர்கள் 5 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் பயிற்சியினை சிறப்பாக பெற்று தங்களது கணினி திறனை மேம்படுத்திக்கொண்டு பணியில் சிறக்க வாழ்த்துகிறேன். பள்ளியில் கல்வி தொலைக்காட்சியை மாணவர்கள் காண்பதை உறுதிப் படுத்தும் தொடர் நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் என்றார்.இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu