திருமயத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ரகுபதி வழங்கல்

திருமயத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்:  அமைச்சர் ரகுபதி வழங்கல்
X

திருமயத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி அளித்த அமைச்சர் எஸ். ரகுபதி. உடன் ஆட்சியர் கவிதாராமு உள்ளிட்டோர்

இந்நிகழ்வில் 433 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவுக்கான உத்தரவை அமைச்சர் வழங்கினார்

திருமயத்தில் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு வழங்கினார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய அமைச்சர் ரகுபதி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றிடும் வகையில் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறார். அந்த வகையில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறையின் சார்பில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை, விதவை உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, புதிய மின்னனு குடும்ப அட்டை, வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் 813 பயனாளிகளுக்கு ரூ.30.58 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்றுவதற்கு அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில் திருமயம் வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராம மக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா வேண்டி கோரிக்கைகள் வரபெற்றதை தொடர்ந்து 433 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதுமே இப்பணிகள் நடைபெற்ற வருகிறது. எனவே இத்தகைய நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் ரகுபதி.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) பிரேம்குமார், திருமயம் ஒன்றியக் குழுத் தலைவர் ராமு, அரிமளம் ஒன்றியக் குழுத் தலைவர் மேகலாமுத்து, ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு(எ)சிதம்பரம், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம், கருப்பையா மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
நாமக்கல் துளிர் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!