மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ. 15 கோடி கடனுதவி: அமைச்சர் ரகுபதி வழங்கல்

மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ. 15 கோடி  கடனுதவி: அமைச்சர் ரகுபதி வழங்கல்
X

மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன் உதவிகளை  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்

புதுக்கோட்டை மத்திய கூட்டுறவு வங்கி 1920 ல் ஆண்டில் தொடங்கி 100 ஆண்டுகளை கடந்து பாரம்பரிய மிக்க வங்கியாக செயல்படுகிறது

புதுக்கோட்டையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் பயனாளிகளுக்கு கடனுதவித் தொகைக்கான காசோலைகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று வழங்கினார்.

பின்னர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 1920 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது 100 ஆண்டுகளை கடந்து பாரம்பரிய மிக்க வங்கியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இவ்வங்கியானது விவசாய பெருமக்களுக்கு வட்டியில்லா பயிர் கடன், நகை அடமானத்தின் பெயரில் பயிர் கடன், விவசாயம் சார்ந்த முதலீட்டு கடன்கள், வட்டியில்லா கேசிசி கால்நடை வளர்ப்பு மற்றும் அவற்றிற்கான மூலதனக் கடன்கள், சுயஉதவிக்குழு கடன்கள், அரசு மானியத்துடன் கூடிய மாற்றுத்திறனாளிகள் கடன், தமிழக அரசு உத்தரவின்படி கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்காக 5 சதவீதம் வட்டியில் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை வழங்கி வருகிறது.

அந்தவகையில் இன்றைய தினம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 3,992 பயனாளிகளுக்கு பயிர்கடன், சுயஉதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், வீட்டுவசதிகடன், சிறுவணிகக் கடன், மத்திய கால விவசாயக் கடன், பணிபுரியும் ஊழியர்களின் சம்பளக் கடன், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான சிறுதொழில் கடன் ஆகிய கடன்கள் ரூ.15 கோடியே 2 லட்சத்து 13,000 மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற கடனுதவிகளை மகளிர் உரியமுறையில் பயன்படுத்திக் கொள்ளவதுடன் சுயதொழில் செய்து தங்களது வாழ்வினை முன்னேற்றிக்கொள்ள வேண்டும்.மேலும் மீண்டும் வங்கிக் கடன் பெறுவதற்கும், வங்கிகள் சிறப்பாக செயல்படுவதற்கும் கடன் தவணைகளை முறையாக திருப்பிச் செலுத்த வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் நலன் காக்கும் வகையில் தொடர்ந்து சிறப்பான திட்டங்களை செல்படுத்தி வருகிறார்கள்.

ஏற்கெனவே தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி அரசு நகரப்பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணம், பால்விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மகளிர் முன்னேற்றமே அரசின் முன்னேற்றம் என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு இதுபோன்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

எனவே தமிழக அரசின் இதுபோன்ற நலத்திட்டங்களை பயனாளிகள் உரியமுறையில் பெற்று பயன்பெற வேண்டும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிகழ்ச்சியில் தெரிவித்தார். பின்னர் திருமயம் ஊராட்சி ஒன்றியம், இராராபுரம் ஊராட்சி, கும்மங்குடியில் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கும்மங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இரண்டு புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் (பொ) பிரேம்குமார், மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு(எ)சிதம்பரம் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!