பொதுமக்கள் அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளின் சேர்க்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமை வகித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:
பள்ளி மேலாண்மைக்குழு பள்ளியில் கூட்டப்பட்டு பள்ளியின் தேவை மற்றும் வளர்ச்சி மேம்பாடுகள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்களாக பதிவு செய்யப்படும். பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் இறுதி செய்யப்படும் தீர்மானங்கள் உரிய முறையில் அரசு சார்ந்த மற்றும் சாரா அலுவலர்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டு செயல்வடிவம் பெறும்.
பள்ளியின் மேம்பாடு மற்றும் மாணவர் நலன் வளம் பெற பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல் மிகவும் அவசியமாகும். அந்த வகையில் இன்றையதினம் அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி, மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் மாணவர்களின் தேவைகள் குறித்தும் பெற்றோர்களிடம் கேட்டறியப்பட்டது. இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம் -2009 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வாகவும் இக்கூட்டம் நடைபெற்றது.
ஏற்கனவே அரிமளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் கட்டடம், கணினி அறை, கழிவறை வசதி உள்ளிட்ட வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் விலையில்லா கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. மேலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட மேற்படிப்புகளில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி வருகிறது.
எனவே பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அதிக அளவு அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முன்வர வேண்டும். மேலும் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்களுக்கு சிறந்த முறையில் கல்வி அளித்து சிறந்த மாணவர்களாக உருவாக்குவதுடன், மாணவர்களும் சிறந்த முறையில் கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் மேகலாமுத்து, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், அரிமளம் பேரூராட்சி செயல்அலுவலர் சரவணன், ரோஸ் நிருவாக இயக்குநர் ஆதப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu