திடீரென களத்தில் குதித்த கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி
சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி திடீரென்று சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அகில இந்திய அரசியலில் நீங்கா இடம் பிடித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம். இவர் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இவருடைய மனைவி நளினி சிதம்பரம் மிகப்பெரிய வழக்கறிஞர். பாரம்பரியமிக்க இந்த குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர் தான் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்.
இவர் தற்போது சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மட்டுமல்லாது கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீ நிதியும் இதுவரை எந்த ஒரு அரசியல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதே கிடையாது. சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மட்டுமே சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை வாங்கி வந்தனர்.
இந்நிலையில் திடீரென்று கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் கல்லக்குடி இருப்பு புதுநிலைப்பட்டி பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டதோடு அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளீர்களா என்று கேட்டறிந்தார்.
இதன் பின்னர் மகளிர் சுய உதவிக் குழுக்களை சந்தித்த ஸ்ரீநிதி பெண்கள் விழிப்புணர்வுடன் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அப்போது பெண்கள் கிராமப் பகுதிகளில் கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் மூலம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார். மேலும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் அவரிடம் கொடுத்த மனுக்கள் மீது பாராளுமன்ற உறுப்பினர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி திடீரென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீநிதி பொதுமக்களை சந்தித்ததும் குறிப்பாக பெண்களிடம் அவர் உரையாடி அவர்கள் நலன் குறித்து கேட்டுக் கொண்ட சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. எதிர்காலத்தில் அரசியலில் ஸ்ரீநிதி களம் காண போவதற்கு இது ஒரு அச்சாரமா என்ற எதிர்பார்ப்பும் தற்போது எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu