அரசின் திட்டங்களை பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும் :ஆட்சியர்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சித்தலைவர் கவிதா ராமு
தமிழகஅரசின் வேளாண் திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு இன்று நேரில் பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசின் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் - அரிசி திட்டத்தின்கீழ் இருநூறு எக்டர் பரப்பளவில் நெல் நேரடி விதைப்பு, வரிசை நடவு, செம்மை நெல் சாகுபடி தொகுப்பு செயல்விளக்கம் அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரிமளம் வட்டாரத்திற்கு வரிசை நடவு தொகுப்பு செயல்விளக்கம் இருபது எக்டர்களுக்கு ரூ.1.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு விதை நெல், நெல் நுண்ணூட்ட கலவை உரம், உயிர் உரங்கள், இலை வண்ண அட்டை, இயற்கை உரம், கோனோ களையெடுக்கும் கருவி ஆகியவை வழங்கப்படுகிறது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2021-22ன் கீழ் மிரட்டுநிலை கிராமத்தில், விவசாயி அகமது சலீம் என்பவரது வயலில் ஒரு எக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள நெல் வரிசை நடவு செயல் விளக்க திடல் பார்வையிடப்பட்டது. இதில் ஒரு எக்டேருக்கு பயனாளிக்கு ரூ.7500 மானியம் வழங்கப்படுகிறது.
மிரட்டுநிலை கிராம விவசாயிகளுக்கு இலை வண்ண அட்டையை பயன்படுத்தி தேவையறிந்து தழைச்சத்து உரமிடுதல் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தமிழக அரசின் வேளாண் திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்கி நல்ல வருமானம் பெற்று பொருளாதார முன்னேற்றம் பெற வேண்டும் என்றார் ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார். இந்நிகழ்வின் போது வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், வேளாண் துணை இயக்குநர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu