குழிப்பிறை பொற்றாமரைக் குளத்தின் வரலாறும், சீரமைப்பு பணிகளும்
சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுவரும் குழிப்பிறை பொற்றாமரைக் குளம்.
புதுகோட்டை மாவட்டம், குழிப்பிறை கிராமத்தில் குடிநீருக்கும், மழைநீர் சேகரிப்புக்கும் ஆதரமாக ஊருக்கு மத்தியத்தில் அமைந்துள்ளது 150 வருட பழமையான பொற்றாமரை குளம். இந்த குளத்தில் தனியார் அமைப்பாகிய பசுமை கூழிப்பிறை டிரஸ்டின் முயற்சியில் கடந்த 40 நாட்களாக ரூ.25 லட்சம் மதிப்பில் பழமைமாறாது கல்லினால் சுற்றுசுவர் சீரமைப்பு பணி நடைபெற்று வருகின்றன.
குழிப்பிறை பொற்றாமரை குளம் மீனாட்சி உடனாய சுந்தரேஸ்வரர் திருக்கோயில் பற்றிய வரலாறு:
குழிப்பிறை கிராமத்திற்கு இதற்கு முந்தைய இயற்பெயர் வாகை வாசல் என்பதாகும். அதற்குச் சான்றாக வாகை கண்மாய் இன்றளவும் உள்ளது. இந்த இடம் பாண்டிய நாட்டைச் சேர்ந்த வரகுண பாண்டியன் என்ற மன்னன் தன் தேவியுடன் நாட்டைச் சுற்றிப் பார்க்க தன் படை வீரர்கள் மற்றும் பிரதானிகளுடன் உலா வந்தார். அப்போது, தன் தேவியினுடைய பிறை என்ற அணிகலன் காணாமல் போனதை கண்டு, மன்னனுக்கும் தேவிக்கும் ஊடல் உண்டாயிற்று.
இதனைக் கண்டு மன்னனும் மக்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஏனெனில் மகாராணியின் பிறை காணாமல் போய்விட்டால் அந்த நாட்டுக்கே பெரும் கேடு விளையும். ஆம் ஆகவே மக்களும் படைவீரர்களும் பிறை கண்டுபிடிக்க அந்த காடு முழுவதும் தேடி அலைந்தபோது அந்தப் பிறை என்ற அணிகலன் தற்பொழுது குழிப்பிறையிலுள்ள பொற்றாமரைக்குளம் இருக்கின்ற இடத்தில் கண்டு எடுக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.
எனவே வரகுணபாண்டியன் மகிழ்ச்சியுடன் அந்த இடத்தில் மதுரையில் உள்ள பொற்றாமரை குளம் போல குளம் ஒன்று தோண்டி பொற்றாமரைக்குளம் என பெயர் வைத்து அதற்கு அருகில் மீனாட்சி உடனாய சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அமைத்து வழிபட்டு வந்தாராம்.
குழிப்பிறை என்ற பெயர் வரக்காரணம்:
வரகுணபாண்டியன் பெரிய சிவதொண்டன். சிவபெருமானுக்கு அரிசிச்சோறு நெய்வேத்தியம் படைத்ததால் தான் அரிசிச் சோறு உண்ணலாகாது என்று நினைத்து வரகு என்ற தானியத்தை தனக்கு உணவாக பயன்படுத்தினான். எனவே அவருக்கு வரகுணபாண்டியன் என்ற பெயர் ஏற்பட்டது. அவருடைய இயற்பெயர் மற்றும் காலம் இவற்றை பாண்டிய மன்னர்களின் வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
பாண்டிமாதேவி தன் கணவர் உணவுக்கு வரகை பயன்படுத்தியதால், அதைவிட தாழ்ந்த தானியம் ஆகிய கேழ்வரகை தன்னுடைய உணவாக பயன்படுத்தினார். ஆகவே கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வந்த அந்த தேவிக்கு கூழி என்ற பெயர் ஏற்பட்டது. இந்தக் கூழியின் பிறை கிடைத்த இடத்தை கூழிப்பிறை என்றானது. நாளடைவில் மருவி குழிப்பிறை என்று அழைக்கபட்டது. ஆகவே வாகை வாசல் என்ற இயற்பெயருடைய இந்த சிறிய ஊர் குழிபிறை என்று பெயர் பெற்றது.
குழிபிறையின் சிறப்பம்சம்:
ஊடலுக்கு பின் கூடல் என்ற திருவிழா எந்த திருத்தலத்திலும் நடைபெறவில்லை. குழிப்பிறையில் மட்டும் இந்த திருவிழா இன்றும் நடைபெற்று வருகிறது.
அதன் விபரம்:
வரகுண பாண்டிய மன்னனுக்கும் அவன் தேவிக்கும் இந்த இடத்தில் ஊடல் ஏற்பட்டு, பிறை என்ற அணிகலன் கிடைத்தவுடன் பெருமகிழ்வுடன் கூடல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனையே அந்த ஊர் மக்கள் சிறிய அளவில் ஊடலுக்கு பின் கூடல் என்ற முறையில் இறைவனுக்கும் இறைவிக்கும் ஊடல் ஏற்பட்டு பிறகு கூடல் உண்டாயிற்று என்று இந்தத் திருவிழாவை கொண்டாடி வந்தார்கள். பிற்காலத்தில் நகரத்தாரின் பொறுப்பிற்கு இத்திருக்கோயில் வந்தவுடன் இந்த திருவிழாவை பெரிய அளவில் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.
மார்கழி திருவாதிரை அன்று பிறை கிடைத்ததால் மார்கழி திருவாதிரை தரிசனத்தோடு இந்த ஊடல் கூடல் உற்சவமும் சேர்ந்தே நடைபெறுகிறது. இதன்காரணமாக கற்பனையாக சுந்தரமூர்த்தி நாயனாரையும் அதன் பிறகு குழிபிறை நகரத்தார்களையும் தூதுவர்களாக உருவாக்கி இறைவனுக்கும், இறைவிக்கும் ஊடல் தீர்த்து கூடல் ஏற்படுத்தியதாக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. இதுவே வாழை மட்டையடி பூஜை என்றும் சொல்லப்படுகிறது. மற்ற ஊர்களில் மதுரை, சிறுகூடல்பட்டியில் கூடலை பற்றி மட்டுமே கூறப்பட்டுள்ளது.
குழிப்பிறையில் மட்டும் ஊடலுக்குபின் கூடல் திருவிழா இன்னும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. பாண்டிய மன்னன் பிறை கண்ட இடத்தில் சிறிய குளத்தை அமைத்து பொற்றாமரைக்குளம் என பெயரிட்டார். பாண்டிய மன்னன் அமைத்த குளத்தை தற்பொழுது பெரிய பொற்றாமரைக்குளமாக கற்களைக் கொண்டு அமைத்த பெருமை குழிபிறை நகரைச் சேர்ந்த திட்டானி அண்ணாமலை செட்டியாரை சாரும்.
இப்படி பழமை வாய்ந்த இந்த குளக்கரையின் சுற்றுச்சுவர்களை பழமை மாறாமல் தனியார் அமைப்பாகிய பசுமை கூழிப்பிறை டிரஸ்டின் முயற்சியில் கடந்த 40 நாட்களாக ரூ.25 லட்சம் மதிப்பில் கல்லினால் சுற்றுசுவர் சீரமைப்பு பணி நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu