திமுக ஆட்சிக் காலத்தில்தான் சென்னை மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றது

திமுக ஆட்சிக் காலத்தில்தான் சென்னை மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றது
X

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி. அருகில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆட்சியர் கவிதா ராமு

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டையை அடுத்த திருமயத்திலுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு ஊசி போடும் பணியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. அந்த வரிசையில் இன்னொரு சிறப்பம்சமாக, இதுவரை மாவட்டத்திலுள்ள 497 ஊராட்சிகளில் 56 ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள ஊராட்சியாக இடம் பிடித்துள்ளது.

இதுவரை தமிழகத்திற்கு 2 கோடியே 69 லட்சத்து 96 ஆயிரத்து 100 தடுப்பூசிகள் வந்துள்ளது.இதுவரை தமிழகத்தில் 2 கோடியே 80 லட்சத்து 20 ஆயிரத்து 391 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரிகளின் கட்டுமானங்கள் தரமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற் கொள்வதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகளில் எங்கெங்கெல்லாம் தனியாருக்கு மருத்துவமனைகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நர்சிங் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்தக் கட்டிடங்களில் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும். மேலும், விதிமுறைப்படி தான் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் சுகாதார நிலையங்கள் ஆகியவற்றின் கட்டுமானங்களில் தரம் குறித்தும், எந்த அளவிற்கு மேம்படுத்த வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கையின் போது, மருத்துவமனைகளின் சீரமைப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழகத்தில் எலி பேஸ்ட் தடை செய்வது தொடர்பாக பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகள் முழுமையாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு தற்போது தமிழகத்திற்கு தொடர்ந்து தடுப்பூசிகளை முறையாக கொடுத்து வருகிறது.

தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. இருப்பினும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றுதான் திமுக தொடர்ந்து கூறி வந்தது. தேர்தல் அறிக்கையிலும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தரப்படும் என்று கூறியிருந்தது. இருப்பினும் தற்போது நீட் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே, நீட்தேர்வுக்கு எதிரான சட்ட முன் வடிவு கொண்டு வந்து, தீர்மானம் நிறைவேற்றப் பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, அவரிடம் அனுமதி பெற்று, தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற்று தரப்படும்.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நீட் தேர்வுக்கு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 2 சதவீதம் பேர் குறைவாக விண்ணப்பித்துள்ளனர். இதற்கு கடந்த இரண்டு ஆண்டு காலமாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் மதிப்பெண்கள் பெற்று உள்ளது தான் காரணம்.திமுக ஆட்சி நடந்த காலங்களில்தான் சென்னை மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. புதிய புதிய மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை திமுக ஆட்சி காலத்தில் தான் கொண்டு வரப்பட்டது என்றார். பேட்டியின்போது, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன், புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா ஆகியோர் உடன் இருந்தனர்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!