கொரோனா 3 ஆவது அலையைப் பற்றி கவலை வேண்டாம்: அமைச்சர் ரகுபதி

கொரோனா 3 ஆவது அலை வந்தால் அதிலிருந்து பொது மக்களை காக்க கேடயம் கவசமாக இருப்பது தடுப்பூசி மட்டும்தான்

கொரோனா 3 வது அலை வருகிறதா இல்லையா என்பதை நினைத்துக் கவலைப்படக் கூடாது, மூன்றாவது அலை வந்தால் அதிலிருந்து பொது மக்களை காக்கும் கேடயம் கவசம் தடுப்பூசி மட்டும்தான் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சியில் உள்ள பாத்திமா அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி போடும் முகாமை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

தடுப்பூசி போடும் முகாமில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது: கொரோனா 3 ஆவது அலை வருகிறதா இல்லையா என்பதை நினைத்துக் கவலைப்படக் கூடாது, ஆனால் மூன்றாவது அலை வந்தால் அதிலிருந்து பொது மக்களை காக்கும் கேடயம் கவசமாக தடுப்பூசி மட்டும்தான் பயன்படுகிறது. யாரெல்லாம் தடுப்பூசி எடுத்துக் கொள்கிறார்களோ அவர்‌கள் 3 ஆவது அலை வந்தால் அந்த பாதிப்பிலிருந்து தப்பித்து கொள்ளமுடியும்.

பொதுமக்கள் அதிகளவில்‌ விழிப்புணர்வு அடைந்துள்ளனர். தற்போது தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டு வருகின்றனர்.மற்ற மாநிலங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்து தடுப்பூசி போட வைக்கும் நிலை உள்ளது.

ஆனால் தமிழகத்தில் பொதுமக்கள் தாங்களாகவே ஆர்வத்துடன் திரண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இது 3ஆவது அலையிலிருந்து தங்களை காத்துக் கொள்ள தயாராகி விட்டார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்றார் அமைச்சர் ரகுபதி.

பின்னர் அதே ஊராட்சிக்குட்பட்ட மணவாளங்கரையில் ஊராட்சி சார்பில் கட்டப்பட்ட இரண்டு நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஒரு குளியல் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, கோட்டாட்சியர் அபிநயா, சுகாதார இணை இயக்குனர் கலைவாணி, திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
ai solutions for small business