புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
X
புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு பணி ஒப்பந்தத்தை வெளிப்படுத்தும் ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டாரத்திலுள்ள மலையடிப்பட்டி (செவ்வலூர் கிராமம்), மேலப்பனையூர் , தேவர்மலை ஆகிய ஊர்களில் தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் ராஜேந்திரன் , நிறுவனர் மணிகண்டன் , ஆய்வுக்கு குழுஉறுப்பினர்கள் கஸ்தூரி ரெங்கன் , மணிசேகரன், பீர்முகமது, சை.மஸ்தான்பகுருதீன், மு.முத்துக்குமார், பா.ரமேஷ்குமார், ஆறுமுகம் ஆகியோரால் மூன்று ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டுகள் குறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் மணிகண்டன் கூறியதாவது ,

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலையான ஒருங்கிணைந்த ஆட்சிமுறை மறையத்தொடங்கிய சூழலில் அதிக நிலம் படைத்தவர்கள் குறுநில மன்னர்களாக செயற்பட்டு வந்துள்ளனர். தமது நிர்வாகத்திற்குட்பட்ட மக்களுக்கும், அவர்களின் உடைமைகளுக்கும், வெளியூரிலிருந்து வணிகம் செய்யும் வணிகர் மற்றும் வணிகப்பொருட்களுக்கும் உரிய பாதுகாவல் பணியை செய்ய வேண்டியிருந்ததன் பொருட்டு நம்பிக்கை மிகுந்தவர்களை அப்பணியில் நியமித்து வந்துள்ளனர். அது பற்றிய அறிவிப்பை வெளிப்படுத்தும் ஆசிரியம் கல்வெட்டுகள் தேவர்மலை, பனையூர் , மலையடிப்பட்டி ஆகிய ஊர்களில் எமது குழுவினரால் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆசிரியம் கல்வெட்டுகள் :

ஆசிரியம் கல்வெட்டுகள் தொல்லியல் ஆய்வாளர்கள் அஞ்சினான் புகலிடம் வழங்கியதை குறிப்பாதாகவே கருதி வருகின்றனர்.

பாதுகாப்பு வழங்குதல் என்ற பொருளுடன் தொடர்பு படுத்தி ஆஸ்ரயம் என்ற சமற்கிருத வேர்ச்சொல்லிலுருந்து பெறப்பட்ட சொல்லாடலாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

இதுவரை தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 67 கல்வெட்டுகளில் ஆசிரியம் , ஆசுரியம்,

அஸ்ரீயம், ஆஸ்ரயம் , ஆச்ரயம் என பல்வேறு சொல்லாடல்கள் இருந்தாலும் எமது ஆய்வில் பட்டியலிடப்பட்ட கல்வெட்டுகளில் 53 கல்வெட்டுகளில் ஆசிரியம் என்ற சொல்லாடலும், 8 கல்வெட்டுகளில் ஆஸ்ரீயம் என்றும், 3 கல்வெட்டுகளில் ஆசுரியம் என்றும் உள்ளது. 3 கல்வெட்டுகளில் மட்டுமே ஆஸ்ரயம் மற்றும் ஆச்ரயம் என்ற சொல்லாடல் கையாளப்பட்டுள்ளது.

எனவே இதனை சமற்கிருத சொல் என்ற கருத்து பொருந்தாது என்பதை மேற்கண்ட புள்ளிவிவரங்கள் நிறுவுகின்றன. ஆசிரியம் என்ற தமிழ்ச்சொல் சங்கப்பாடல்களிலும் காணப்படுகின்றன. ஆசிரியப்பா என்பது ஒரு கருத்தை சுருங்கச்சொல்லுதல் என்ற பொருள்படும்படி பாவகை என வரையறுக்கப்படுகிறது.. தமிழ் இலக்கிய அகராதிகள் ஆசிரியர் என்பதை ஆசு + இரியர் அதாவது பிழைகளை நீக்குபவர் அல்லது குற்றம் களைபவர் என்று பொருளை சுட்டுகின்றன.

இதே அடிப்படையில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள ஆசிரியம் என்பதையும் பொருத்தி பார்க்கும்போது திருட்டு, கொள்ளை நடைபெறாமல் காத்து, பொதுப்பொருட்களுக்கு அரணாக இருத்தல் என்று எச்செயலிலும் வாக்கு தவறாமை, தவறு நடைபெறாமல் காக்கும் பொறுப்புடையவருக்கான உடன்படிக்கையேற்பு என்று பொருள் கொள்ளலாம்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆசிரியம் கல்வெட்டுகள்: மேலப்பனையூர் கிராமத்தில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கல்வெட்டு தற்போது புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்