சட்டசபையில் உட்கார போரடிக்குது: உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில், மாற்று கட்சியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
புதுக்கோட்டையில் இன்று நடந்த நிகழ்ச்சியில், அதிமுக, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்
இதில், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் நான் பிரச்சாரம் மேற்கொண்டதால்தான் வெற்றி பெற்றதாக அனைவரும் கூறுகிறார்கள். அது தவறான கருத்து. வெற்றி பெற்றதற்கான முழு காரணம் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் தான்.
சட்டசபையில் அமர்வதற்கு எனக்கு போர் அடிக்கிறது. எதிர்க்கட்சிகள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. கேள்வி கேட்கும் இடத்தில் இருக்கக் கூடிய எஸ் பி வேலுமணி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் தமிழக அரசை பாராட்டுகின்றனர். அவ்வளவு சிறப்பாக தமிழக முதல்வர் ஆட்சி செய்து வருகிறார்
ஏற்கனவே, இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மீது, ஊழல் செய்தற்காக வழக்கு போடப்பட்டுள்ளது. மீதமுள்ள ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது விரைவில் நடவடிக்கை தொடரும். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வராக ஸ்டாலின் விளங்குகிறார்.
இதே வேகத்தில், தமிழக முதல்வர் ஆட்சி செய்து, நல்ல பல திட்டங்களை நிறைவேற்றினால் அடுத்த தேர்தலில் நாம் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டியதில்லை. பொதுமக்கள் அனைவரும் நமக்கு வாக்களித்து விடுவார்கள் என்றார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி, மகேஷ் பெய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா, எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே கே செல்லபாண்டியன், மாவட்ட செயலாளர் பெரியண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu