உழவர் சந்தையில் பெண் விவசாயிடமிருந்து ரூ 30 ஆயிரம் திருட்டு: போலீஸார் விசாரணை
புதுக்கோட்டை உழவர் சந்தை
புதுக்கோட்டை உழவர் சந்தையில் பெண் விவசாயிடமிருந்து ரூ 30 ஆயிரம் பணம் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுக்கோட்டை உழவர் சந்தையில் விவசாயிகள் பயன்படும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த கடைகளில் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கக்கூடிய காய்கறிகள் கீரை வகைகள் உள்ளிட்டவைகளை எடுத்து வந்து கடைகளில் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். உழவர் சந்தையில் விவசாயிடம் இருந்து அவ்வப்போது அதிக கூட்டம் இருக்கும் நேரங்களில் கடைகளில் வைக்கப்பட்டிருந்த பணம் செல்போன்கள் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் செல்வது தொடர்ந்து நடந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் உழவர் சந்தையில் கூட்டம் அதிகளவில் இருந்தது. உழவர் சந்தையில் 23 ஆம் எண் கடையில் வியாபாரம் செய்து வரும் சங்கிலி அம்மாள் என்பவரது கடையில், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் தக்காளி உள்ளிட்டவைகளை அந்தக் கடையிலிருந்து வாங்கி சென்றனர். கடை முன்பு கூட்டம் அதிகமாக இருந்ததால் வியாபார மும்முரத்தில் கடையில் தான் பணம் வைத்திருந்த பையை கவனிக்காமல் சங்கிலி அம்மாள் இருந்துவிட்டார்.
இதனை தங்களுக்கு சாதகமாக்கி கொண்ட மர்ம நபர்கள், கடையில் இருந்த பண பையை திருடி சென்றுள்ளனர். கடையில் பொதுமக்கள் கூட்டம் குறைந்த பிறகு, தான் வைத்திருந்த பணப்பையை தேடிப்பார்த்தபோது அது காணாமல் போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கிலி அம்மாள் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து புதுக்கோட்டை நகர காவல்நிலைய போலீசார் உழவர் சந்தைக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உழவர் சந்தையில் தொடர் திருட்டு நடந்து வருவதால் ஒவ்வொரு கடைக்கும் தமிழக அரசு சிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu