தமிழகத்தில் உள்ள ஆறுதல் ஏரி குளங்கள் மாசு படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்
புதுக்கோட்டை மருப்பிணி புல்பண்ணையில் உள்ள புதைசாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்த சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். உடன் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு
தமிழகத்திலுள்ள ஆறுகள் ஏரிகள் குளங்கள் ஆகியவற்றில் மாசுபடாமல் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.அதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் கடந்த 2008 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட புதை சாக்கடைத் திட்ட பணிகள் முடிவடைந்து தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஆனால் புதைசாக்கடை திட்டத்தால் நகராட்சி பகுதிகளில் குறைந்த பரப்பளவிலேயே பயன் பெற்று வருகின்றனர். புதை சாக்கடை திட்டத்தின் மூலமாக வெளியேற்றப்படும் கழிவுநீர் சமீபகாலமாக நீர்நிலைகளில் கலந்து வருவதாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட புல் பண்ணையில் அமைந்துள்ள புதை சாக்கடை திட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில், மூன்று மாத காலத்திற்குள் கழிவு நீர் நிலைகளில் சென்று கலக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது: கடந்த திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட புதைசாக்கடைத் திட்டம் முழுமை அடையாமல் பாதியிலேயே இருப்பதால் கழிவுகள் , நீர் நிலைகளில் கலந்து வருகிறது. மேலும் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் நீர்நிலைகளுக்கு சென்றடைகிறது. சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் மீண்டும் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக புதுக்கோட்டை நகரில் வசித்து வரும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தடுக்கும் நோக்கில் தற்போது ஒரு திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. மூன்று மாத காலத்திற்குள் இந்த திட்டம் முடிவடைந்து, நீர்நிலைகளில் கழிவு நீர் கலக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள நதிகள் ஏரிகள் ஆறுகள் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகள் ஆறுகள் ஊராட்சிக்கு சொந்தமான ஏரிகள் ஆகியவற்றை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் எங்கு எங்கெல்லாம் கழிவுநீர் கலக்கிறது என்பதை ஆய்வு செய்து கழிவு நீர் கலக்காமல் இருப்பதற்கும் அதேப்போல் ஆறுகள் ஏரிகள் ஆகியவை மாசுபடாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் அமைச்சர்கள் ஆட்சி செய்த போது தவறு செய்துள்ளனர். அவர்கள் செய்த தவறின் காரணமாக தான் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது இது அரசியல் பழிவாங்கும் செயலோ அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியோ கிடையாது.ஏற்கெனவே, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் பல்வேறு சோதனைகள் நடைபெற்று என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது நாடறிந்த உண்மை.தமிழக முதல்வர் இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றுவதற்கு நேர்மையான முறையில் ஆட்சி செய்து வருகிறார்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரியில் அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக கடந்த சோதனையின் போது கணக்கீடு செய்யப்பட்டது. இதுகுறித்து, தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் மெய்யநாதன். ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, தாசில்தார் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் நாகராஜன் மற்றும் திமுக நிர்வாகிகள் த.சந்திரசேகர், க. நைனா முகமது உள்பட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu