போதிய பேருந்து வசதி இல்லாததால் படிக்கட்டில் தொங்கிச் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள்
பேருந்து வசதிகள் இல்லாததால் படிக்கட்டில் தொங்கி செல்லும் பள்ளி மாணவ மாணவிகள்.
பேருந்து வசதிகள் இல்லாததால் படிக்கட்டில் தொங்கி செல்லும் நிலைக்கு பள்ளி மாணவ மாணவிகள் தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் கேள்விக்குறியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்துவந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது இயங்கி வருகிறது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச்செல்லும் பேருந்துகளில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க முடியாமல் அதிக அளவில் பள்ளி மாணவ, மாணவிகள் கூட்டம் கூட்டமாக பேருந்துகளில் ஏறிச் செல்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளகாலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவைப்படும் எண்ணிக்கையில் பேருந்து வசதிகள் செய்து கொடுக்காத காரணத்தினால் பேருந்துகளில் தொங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை நகர பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அரசு பேருந்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூட்டமாக ஏறியதால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட அரசு பேருந்து பழைய பேருந்து நிலையம் அருகே சுமை தாங்க முடியாமல் நின்று விட்டது.
இதனை அடுத்து அந்தப் பேருந்தில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு விட்டனர். இதனால் வீடுகளுக்கு செல்ல பேருந்து வசதிகள் இல்லாமல் தவித்து நின்ற பள்ளி மாணவ, மாணவிகள் மாற்றுப் பேருந்தில் செல்வதற்கு ஏற்பாடு செய்யப் பட்டது. அந்த மாற்று பேருந்திலும் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் தொங்கிக் கொண்டு பேருந்தில் பயணம் சென்ற காட்சி பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் வேதனையையும் உருவாக்கியது.
தற்போது பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வைரஸ் தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் , மாணவ மாணவிகள் கூட்டம் கூட்டமாக பேருந்துகளில் செல்வதால் நோய்த்தொற்று பரவக் கூடிய சூழ்நிலை உருவாகி வருகிறது .எனவே முறையாக பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பேருந்து வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu