கனமழையால் குளம் நிரம்பி கோயிலுக்குள் புகுந்த நீர்: புதுக்கோட்டை எம்எல்ஏ ஆய்வு
புதுக்கோட்டையில் மழையால் நிரம்பி வழியும் பல்லவன் குளத்தை சுற்றுச்சுவற்றில் ஏறி பார்வையிட்ட எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா
புதுக்கோட்டையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை பெய்த கனமழை காரணமாக பல்லவன் குளம் நிரம்பி சாந்தநாத சுவாமி திருக்கோயில் மழைநீர் உட்புகுந்தது. மழை நீரை வெளியேற்றுவது தொடர்பாக நகராட்சி அதிகாரிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா நேரில் ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவ மழை வரும் 26-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்றும் நாளையும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருவதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை புதுக்கோட்டை நகர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை தொடர்ந்து பெய்து வந்தது. குறிப்பாக புதுக்கோட்டை நகர் பகுதியில் 5 மணி நேரத்திற்கும் மேலாக நள்ளிரவில் கனமழை கொட்டித் தீர்த்தது.
நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை பெய்த கனமழை காரணமாக பல்லவன் குளம் நிரம்பி உபரி நீர் வெளியேற தொடங்கியது. வெளியேறிய மழைநீர் அருகில் உள்ள சாந்தநாத சுவாமி கோயில் மற்றும் பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் மழைநீர் புகுந்து. கோயிலில் சுமார் 2 அடி உயரத்துக்கு மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர்.பூ மார்க்கெட்டுக்கு மழை நீர் புகுந்ததால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மழைநீரை உடனடியாக வெளியேற்றவும் வரும் காலங்களில், மழைநீர் கோவில் மற்றும் பூ மார்க்கெட்டில் மழைநீர் உட்புகாமல் இருப்பதற்கும் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், கோயிலுக்குள் தேங்கி இருக்கும் மழை நீரை உடனடியாக வெளியேற்றவும், குளத்திற்கு அருகே உபரி நீர் வெளியேறும் கால்வாயை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu