ரூ.60,000 கள்ள நோட்டு டெபாசிட் புதுக்கோட்டை அருகே 2 பேர் கைது .

புதுக்கோட்டை அருகே ஏ.டி.எம். இயந்திரத்தில் கள்ளநோட்டை டெபாசிட் செய்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.


புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இயங்கிவரும் பரோடா வங்கியின் ஏடிஎம்மில் கடந்த மாதம் 27ஆம் தேதி 30 -2,000 ரூபாய் நோட்டுகளாக 60,000 ரூபாயை கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கள்ள நோட்டுகள் கம்மங்காடு கிராமத்தைச் சேர்ந்த ரேவதி என்பவரின் வங்கிக் கணக்கு எண்ணில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பரோடா வங்கி மேலாளர் ராதாகிருஷ்ணன் கடந்த 16ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் நேற்று இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட போலி ரூபாய் நோட்டுகளை வங்கி ஏ.டி.எம்.மில் டெபாசிட் செய்துள்ளதாக கம்மங்காடு கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் அவரது உறவினர் ரவிச்சந்திரன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ரவிச்சந்திரன் பெங்களூரைச் சேர்ந்த ஒரு நபரிடம் இரட்டிப்பாக பணம் பெறும் நோக்கில் ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்து உள்ளதாகவும் அப்போது அந்த நபர் ரவிச்சந்திரனை ஏமாற்றிவிட்டு இரண்டு லட்ச ரூபாய் போலி கள்ள நோட்டுகளை கொடுத்துள்ளதாகவும் அந்த கள்ள நோட்டுகளை என்ன செய்வதென்று தெரியாத ரவிச்சந்திரன் தனது உறவினர் மூலம் அவரது மனைவி ரேவதியின் வங்கிக் கணக்கில் கடந்த மாதம் பரோடா வங்கி ஏ.டி.எம்.ல் டெபாசிட் செய்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து சரவணன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழகத்தில் தொடர்ந்து ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் புதுக்கோட்டை அருகே ஏ.டி.எம். இயந்திரத்தில் கள்ள நோட்டை டெபாசிட் செய்த சம்பவம் வங்கி வாடிக்கையாளர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்