விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெண்களுடன் செல்ஃபி எடுத்து உற்சாகப்படுத்திய ஆட்சியர்
புதுக்கோட்டையில் பெண்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.
புதுக்கோட்டை நகராட்சி சார்பில் கொரோனா மூன்றாவது அலை தடுக்கும் விதத்தில் இன்று புதிய பேருந்து நிலையம் அருகே கை கழுவுதல், முககவசம் அணிவித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ராட்சத பலூன் மூலம் வைரஸ் தொற்றை பற்றி தெரிந்து கொள்ளும் விதத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கை கழுவுதல் குறித்து நடனம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இன்று துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியில் நடனமாடிய பெண்கள் மற்றும் விழிப்புணர்வு கோலம் வரைந்த பெண்களுடன் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மகிழ்ச்சியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு பெண்களை உற்சாகப்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, தமிழக முதலமைச்சர் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் மாவட்டம் முழுவதும் வைரஸ் தொற்று பற்றிய விழிப்புணர்வை மீண்டும் பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் தொடர்ந்து ஒரு வாரங்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
அதன்படி, இன்று புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்தில் வைரஸ் தொற்று பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் கையெழுத்து இயக்கம், பிரச்சார வாகனம் உள்ளிட்ட பல்வேறு நடன நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இன்று துவங்கப்பட்டது.
இன்று துவங்கி தொடர்ந்து ஒரு வாரம் வரை தினந்தோறும் பிரச்சாரங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. தற்போது பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக் கவசங்கள் அணிந்து தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
அதிக அளவில் கூட்டங்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே வர்த்தக நிறுவனங்கள், கடைகளில் அதிகளவில் கூட்டங்கள் சேர்த்தால் அந்தக் கடைகள் மீது அபதாரம் விதித்து நகராட்சி மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த நடவடிக்கை தொடரும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் அபிநயா, நகராட்சி ஆணையர் நாகராஜ், நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் கலைவாணி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu