கணிதப்பயிற்சியை நிறைவு செய்த 9 ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

கணிதப்பயிற்சியை  நிறைவு செய்த 9 ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்
X

மகிழ் கணிதப் பயிற்சியை சிறப்பாக நிறைவு செய்த 9 ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு

இணையவழி ஒப்படைப்பு மதிப்பீட்டில் சிறப்பாக செயல்பட்டதற்கு மாநிலத்திட்ட இயக்ககத்தால் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மகிழ் கணிதப் பயிற்சியை சிறப்பாக நிறைவு செய்த 9 ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 219 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகத்தில் கணித ஆசிரியர்களுக்கு இணையவழியில் மகிழ் கணிதப் பயிற்சி ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இப்பயிற்சியின் நோக்கம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கணித பாட வகுப்பானது வழக்கமானதாக அல்லாமல் கணிதப் பாடப் பொருளை எளிமையான மற்றும் சிறு, சிறு செயல்பாடுகள் வாயிலாக கற்பிப்பதன் மூலம் அவர்கள் கணித பாடத்தைப் பயமின்றி மகிழ்வுடனும், எளிதாக புரிந்து கொண்டும், ஆர்வத்துடனும் கற்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்பதேயாகும்.இப்பயிற்சியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை கணிதம் கற்பிக்கும் அனைத்து கணிதப் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 767 பேர் பயிற்சி பெற்றார்கள்.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சி.புவனேஸ்வரி, பி.மஞ்சுளா, சி.டி.கிளாடிஸ்கெலன், பி.பத்மகுமார், ஜி.ரெங்கசாமி, எம்.உஷாராணி, எம்.மாலதி,வி.டி.தனலெட்சுமி, சி.அழகுமதி ஆகிய 9 ஆசிரியர்கள் இணையவழி ஒப்படைப்பு மற்றும் மதிப்பீட்டில் சிறப்பாக செயல்பட்டமைக்கு மாநிலத் திட்ட இயக்ககத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா, இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் மணிமொழி, அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் இராஜாராமன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story