1000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர்கால குமிழி கல்வெட்டு கண்டுபிடிப்பு
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர்கால குமிழி கல்வெட்டு.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுக்கா சத்தியமங்கலம் அருகேயுள்ள மேலூர் பாசன கண்மாயில் குமிழிக்காலில் எழுத்துப் பொறிப்பு இருப்பதாக கீரனூர் சேர்ந்த வேளாண் பொறியாளர் நாராயணமூர்த்தி தாெல்லியல் துறைக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின்பேரில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனரும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறை ஆய்வாளருமான மங்கனூர் மணிகண்டன் கல்வெட்டை படியெடுத்து வாசித்துள்ளார்.
இதில் தட்டான் திறமன் என்பவர் நீர்ப்பாசனக்கண்மாய்க்கு பெருமடைக்கால் அமைத்துக்கொடுத்த தகவல் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் இக்கல்வெட்டு ஆயிரமாண்டுகளுக்கு முற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் மணிகண்டன் கூறுகையில், தமிழகத்தில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாசனக்குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் உள்ளன. அவற்றில் சுமார் 250 குமிழிக்கல்வெட்டுகளே இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு மாவட்டங்களில் நீர்ப்பாசன அமைப்புகள் பற்றிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அதிகமான குமிழிக்கல்வெட்டுகள் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி பகுதிகளைச் சேர்ந்தவையாக உள்ளன.
குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 42 கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலனவை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் ராசேந்திரன் கண்டுபிடித்து பதிவு செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய கல்வெட்டுகள் பழங்கால பாசனமுறையில் தமிழர்கள் கொண்டிருந்த நீர்ப்பாசன மேலாண்மை நுட்பத்தையும், நீர்ப்பங்கீட்டில் பின்பற்றப்பட்ட சமூக நடைமுறைகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன.
குமிழிக்கல்வெட்டுகள் புதுக்கோட்டையின் கவிநாடு கண்மாயில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோமாறன் சடையன் என்கிற முதலாம் வரகுணபாண்டியன் என்பவரால் அமைக்கப்பட்ட குமிழி கல்வெட்டு காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu