தமிழில் முதல் ஞானபீட விருது பெற்ற அகிலன் பிறந்த தினம் இன்று
அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம்.எதார்த்தம் மற்றும் ஆக்கப்பூர்வமான எழுத்து நடைக்கு பெயர் பெற்றவர். அகிலன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். சிறப்புப் பெற்ற புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக இவருக்கு பல முகங்கள் உண்டு. தமிழில் முதல் ஞானபீட விருது பெற்றவருமான அகிலன் பிறந்த தினம் இன்று (ஜூன் 27).
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் (1922) பிறந்தவர். இயற்பெயர் பி.வி.அகிலாண்டம். தந்தை வைத்தியலிங்கம் பிள்ளை ஒரு கணக்கு அலுவலர் ஆவார். தன்னுடைய ஒரே மகன் அகிலன் மீது அவர் அளவுகடந்த அன்பு கொண்டிருந்தார். ஆனால் எதிர்பாராவிதமாக அகிலன் தன்னுடைய சிறு வயதிலேயே தந்தையை இழக்க நேர்ந்தது. ஆனால் அவரது தாயார் அமிர்தம்மாள் ஓர் அன்பான மனிதராக இருந்தார், ஆக்கப்பூர்வமான ஒரு படைப்பாளி என்ற முறையில், தன் மகனை ஒரு எழுத்தாளராக அவர் வடிவமைத்தார். பள்ளி நாட்களில் அகிலன் காந்திய தத்துவத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார், சுதந்திரப் போராட்டத்தில் களம் இறங்க வேண்டும் என்பதற்காக புதுக்கோட்டையில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தியாகம் செய்தார்..
பள்ளிப் பருவத்தில் 'சக்தி வாலிபர் சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கி, கள்ளுக்கடை மறியல், அந்நிய துணி புறக்கணிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டார்.
இதழ்களில் சிறுகதைகள் எழுதிவந்தார். 1938-ல் பள்ளியின் காலாண்டு சஞ்சிகைக்காக 'அவன் ஏழை' என்ற கதையை முதன்முதலாக எழுதினார். கதை நடையைப் பார்த்து சந்தேகம் அடைந்த தமிழ் ஆசிரியர், 'எங்கு திருடினாய்?' என்றார். இவர் கோபத்துடன், 'என் கதையை திருப்பிக் கொடுத்துடுங்க. பிரசுரிக்க வேண்டாம்' என்றார். உண்மையை அறிந்த ஆசிரியர், அவரை தட்டிக்கொடுத்தாராம்.
முதல் நாவல் 'மங்கிய நிலவு' 1944-ல் வெளிவந்தது. மொத்தம் 20 நாவல்கள், 200 சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள், மொழிபெயர்ப்புகளைப் படைத்துள்ளார். இலக்கியம் மனிதனை மேம்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தவர். சமூக அக்கறை, சுவையான கதை, உயிர்த் துடிப்பான கதாபாத்திரங்கள், அழகிய, எளிய நடை இவரது படைப்புகளின் சிறப்பம்சங்கள்.
இந்திய மொழிகள் மட்டுமின்றி, உலகின் பல மொழிகளிலும் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேடை நாடகங்கள், தொலைக்காட்சி, வானொலி நாடகங்கள் என பல வடிவங்களில் உலகின் பல பகுதிகளிலும் இவரது படைப்புகள் வலம் வருகின்றன.
இவரது 'பாவை விளக்கு' நாவல் அதே பெயரிலும், 'கயல்விழி' நாவல் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' என்ற பெயரிலும் திரைப்படங்களாக வந்தன. ஆனந்த விகடன், குமுதம், கலைமகள், தினமணி ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 2 பாகங்களாக வெளிவந்தன.
நெஞ்சின் அலைகள்', 'பெண்', 'எங்கே போகிறோம்' ஆகிய நாவல்கள், 'சத்ய ஆவேசம்', 'ஊர்வலம்', 'எரிமலை' உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள், சிறுவர் நூல்கள், பயண நூல்கள், கட்டுரைகளைப் படைத்துள்ளார்.
வேங்கையின் மைந்தன்' நாவல் 1963-ல் சாகித்ய அகாடமி விருதையும் 'சித்திரப்பாவை' 1975-ல் ஞானபீட விருதையும் பெற்றன. பல படைப்புகள் தமிழக அரசு விருதுகளைப் பெற்றுள்ளன. சோவியத் லாண்ட் விருதும் பெற்றுள்ளார்.
மு.வரதராசனார், கி.வா.ஜகன்னாதன், கி.ஆ.பெ.விஸ்வநாதம், சிவாஜி கணேசன், டி.கே.எஸ். சகோதரர்கள், ஏ.பி.நாகராஜன், கே.சோமு, டி.எம்.சவுந்தரராஜன், சி.சுப்பிரமணியம், எம்.பக்தவத்சலம் என பல துறைகளின் ஜாம்பவான்களுடனும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர்.
கொள்கைப் பிடிப்பும் அதனை அடைய உள்ளார்ந்த ஈடுபாட்டுடனான உழைப்பும் கொண்டவர். தமிழ் இலக்கியத்துக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கியவரும், தமிழில் முதல் ஞானபீட விருதைப் பெற்றவருமான அகிலன், தனது 66 வயதில் (1988) மறைந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu