கறம்பக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது..!

கறம்பக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி பொதுமக்கள்  பயன்பாட்டிற்கு வந்தது..!
X
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி துணை மின்நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி துணை மின்நிலையத்தில் பழுதடைந்த மின்மாற்றிக்கு பதிலாக நிறுவப்பட்ட புதிய மின்மாற்றியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்து பேசியதாவது.

தமிழக முதல்வர் வெளிப்படைத் தன்மையான நிர்வாகத்துடன், பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தொடர் ஆய்வு பணிகள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் நேற்றையதினம் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கல்லணை கால்வாய் மற்றும் காவிரி வாய்க்கால் தூர்வாரும் பணிகளை தொடர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் இன்றையதினம் மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீரை திறந்து வைத்துள்ளார். காவிரி நீர் கடைமடை பகுதிக்கும் செல்வதை உறுதி செய்யும் வகையில் கால்வாய்கள் தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்தபின் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து வைத்தவர் தமிழக முதல்வர் தான்.

விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறைக் கொண்டு தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 110/33-22-11 கே.வி. துணை மின்நிலையத்தில் 110/22 கி.வோ, 10 எம்.வி.ஏ மின்மாற்றி ஏற்கனவே பழுதடைந்தது.

பழுதடைந்த மின்மாற்றியால் ஓரிரு இடங்களில் மின்தடை உள்ளிட்ட சில மின் குறைபாடுகள் ஏற்பட்டது. பொதுமக்களுக்கு தடையின்றி சீரான முறையில் மின் விநியோகம் செய்யும் வகையில் உடனடியாக சம்மந்தப்பட்ட மின்வாரிய உயர் அலுவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு பேசி புதிய மின்மாற்றி அமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் இன்றையதினம் கறம்பக்குடி துணை மின்நிலையத்தில் பழுதடைந்த மின்மாற்றிக்கு பதிலாக புதிதாக மின்மாற்றி நிறுவப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மின்மாற்றியின் மூலம் இப்பகுதியை சுற்றியுள்ள கறம்பக்குடி, குளந்திரான்பட்டு, புதுப்பட்டி, கரு.கீழத்தெரு, கரு.தெற்குத் தெரு, முக்கூட்டுப்பட்டி, பள்ளத்தான்மனை, பல்லவராயன்பத்தை, குளப்பம்பட்டி, சூரக்காடு, முள்ளங்குறிச்சி, சவேரியார்பட்டினம், திருமணஞ்சேரி, மஞ்சுவிடுதி, குரும்பிவயல் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு சீரான தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.

இதனால் வீட்டு மின் இணைப்புகள், விவசாய மின் இணைப்புகள், வர்த்தக மின் இணைப்புகள், தொழிற்சாலை மின் இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு மின் நுகர்வோர்கள் மிகுந்த பயனடைவார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வம்பன் பகுதியில் ரூ.12.75 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் கருக்காக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேவைப்படும் இடங்களில் துணை மின் நிலையம் அமைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாவட்டத்தில் கூடுதல் மின்பழு இருக்கும் அனைத்து இடங்களும் கணக்கெடுக்கப்பட்டு அப்பகுதிகளில் தேவைக்கேற்ப புதிய மின்மாற்றிகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் ஆத்தங்கரை விடுதி, வெள்ளாளவிடுதி இடையே ரூ.13 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை மேம்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கீல் கே.கே.செல்லப்பாண்டியன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமார், ஒன்றியக் குழுத் தலைவர் மாலா ராஜேந்திரதுரை மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!