திருவாரூர்- காரைக்குடி - அறந்தாங்கி வழியாக இன்று முதல் ரயில் சேவை தொடக்கம்

அறந்தாங்கி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் திருவாரூரில் இருந்து அறந்தாங்கி வழியாக காரைக்குடிக்கு ரயில் போக்குவரத்து துவங்கியது.
கொரோனா காரணத்தினால் கடந்த நான்கு மாதங்களாக காரைக்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் ரயிலானது நிறுத்தி வைக்கப்பட்டது இதனால் அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பொதுமக்கள் வெளியூர் செல்ல முடியாமல் மிகுந்த சிரமப்பட்டனர் குறிப்பாக வியாபாரிகள் விவசாயிகள் வர்த்தகர்கள் பொருட்களை விற்கவும் பொருட்களை வாங்கிக்கொண்டு அறந்தாங்கி வரவும் மிகுந்த சிரமப்பட்டனர்.
இந்நிலையில் பொதுமக்கள், அறந்தாங்கி வர்த்தக சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் மற்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மூலமாக இந்திய ரயில்வே ஆணையத்திற்கு மனுக்கள் கொடுக்கப்பட்டன. அந்த மனுவை பரிசீலித்த இந்திய ரயில்வே மீண்டும் இந்தத்தடத்தில் ரயில் இயக்கப்படும் என அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று காலை காரைக்குடியில் இருந்து புறப்பட்ட ரயில் மதியம் அறந்தாங்கிக்கு வந்தடைந்தது அங்கு ரயில் பயணிகள் சங்கம் பொதுமக்கள் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் ரயிலுக்கு உற்ச்சாக வரவேற்பளித்து அங்குள்ளவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
மேலும் அறந்தாங்கிக்கு ரயில் போக்குவரத்து கொண்டு வந்த அனைத்து துறை அதிகாரிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கும் பொதுமக்கள் வர்த்தகர்கள் வியாபாரிகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்த ரயில், வாரத்தில் 6 நாட்களும் இயங்கும் என்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரை கேட் கீப்பர் இல்லாத காரணத்தினால் இந்த ரயிலில் வருபவர் கேட்டுக்கு முன்பாகவே ரயில் நின்ற பிறகு அவர் இறங்கி ரயில்வே கேட்டை மூடி விடுவார். பின்னர் ரயில் கடந்து சென்ற பின்னர் அவர் ரயில் கேட்டை திறந்து வைத்து விட்டு, மீண்டும் ரயிலில் ஏறி பயணம் செய்வார். இதனால் பயண நேரம் மிக அதிகமாக இருக்கும் என பயணிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த ரயிலானது, திருவாரூர், மாங்குடி, மாவூர்ரோடு, திருநெல்லிக்காவல், அம்மனூர், ஆலம்பட்டிமணலி, திருத்துறைப்பூண்டி, தில்லை விளக்கம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டம், ஆயிங்குடி, அறந்தாங்கி, வாளராமாணிக்கம், மற்றும் பெரியகோட்டை, கண்டனூர் புதுவயல், காரைக்குடி, உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu