கடலில் தவறி விழுந்த இளைஞரின் உடல் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரம் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பேட்டி
''புதுக்கோட்டை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வாலிபர் தவறி விழுந்து இன்ஜின் படகில் மோதி மாயமானதால் அவரை தேடும் பணியில் ஹெலிகாப்டரை ஈடுபடுத்தப்படும்,'' என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கொடிக்குளம் ஊராட்சி வடக்கு புதுக்குடி மீனவ கிராமத்திலிருந்து தினமணி என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் தினமணி (46), வசீகரன் (19) மணிகண்டன் (23) ஆகிய மூன்று மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
16 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது மீனவர் வசீகரன் படகின் எஞ்ஜின் பக்கம் அமர்ந்து கொண்டு வலையில் உள்ள மீன்களை ஆய்ந்துள்ளார். இதில், எதிர்பாராத விதமாக வலை எஞ்ஜின் மீது சிக்கி,வலையோடு வசீகரன் தூக்கி வீசப்பட்டுள்ளார். தூக்கிவீசப்பட்ட வசீகரன் எஞ்ஜின் மீது மோதி தலை பகுதியில் லேசானக் காயத்துடன் நீரில் மூழ்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து சக மீனவர்கள் கடலில் குதித்து தேடியுள்ளனர்.
நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இளைஞர்களின் உடலை தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் கடலோர காவல்படையின் தேடி வரும் நிலையில் இன்று தமிழகசுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மீனவர் வசீகரன் வீட்டிற்கு நேரில் சென்று தற்காலிக நிவாரணமாக ரூபாய் 50,000 நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.
மேலும், மீனவரின் உடலை தேடும் பணியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேல் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:
நேற்று கடலில் மீன் பிடிக்கச் செல்லும் பொழுது கடலில் தவறிவிழுந்த இளைஞர் வசீகரன் இல்லத்திற்கு வந்து அவர்கள் பெற்றோருக்கு ஆறுதல் கூறினேன். தமிழக அரசு வசீகரனின் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது தற்போது படகுகள் மூலம் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். படகுகள் மூலம் உடலை தேட முடியாவிட்டால் ஹெலிகாப்டர் கொண்டு உடலை தேடும் பணியில் ஈடுபடுவதற்கு தயாராக இருக்கின்றோம்.
மேலும், வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் இளைஞர்கள் அதிகளவில் மீன் பிடிக்க கடலுக்கு செல்கிறார்கள். இளைஞர்களை பாதுகாக்கும் விதத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் தொழிற்சாலைகள் அமைத்து அவர்களுக்கு வேலைவாய்ப்பை பெறுவதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். விரைவில் தொழிற்சாலைகள் வேலை வாய்ப்புகளை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu