மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: அமைச்சர் தகவல்

பொது மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தகவல்.

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், சிட்டங்காடு கிராமத்தில் அருள்மிகு சித்திவிநாயகர் பாலமுருகன் கோவில் திருமண மண்டபத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள உணவு உண்ணும் கூடத்திற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்.

திருநாளூர் தெற்கு அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவிகள் மாநில அளவில் நடைபெற்ற தேசிய வருவாய் வழித்தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டது. தேசிய வருவாய் வழித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 4 மாணவிகளுக்கும் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு மாதமும் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் திருநாளுர் தெற்கு எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் ரூ.18.03 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ள சாலைப் பணிகளை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மாங்குடி ஊராட்சி, இடைவிரியேந்தல் கிராமத்தில் ரூ.10.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய அங்கன்வாடி கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதே போன்று மாங்குடியில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாமும் துவக்கி வைத்து பார்வையிடப்பட்டது.

ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று பேருந்து வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, கலையரங்கம், நேரடி நெல் கொள்முதல் நிலையம் போன்ற பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களின் ஏனைய கோரிக்கைகளும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச் செல்வம், அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிங்காரவேலு, அசோகன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
the future of ai in healthcare