கடலில் மீன்பிடிக்கச் சென்ற 19 வயது மீனவர் படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே வடக்கு புதுக்குடியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர் வசீகரனின் உடல் இன்று மீட்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
கொடிக்குளம் ஊராட்சி வடக்கு புதுக்குடி மீனவ கிராமத்திலிருந்து தினமணி என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் தினமணி (46), வசீகரன் (19) மணிகண்டன் (23) ஆகிய மூன்று மீனவர்கள் 26ம் தேதி சனிக்கிழமையன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 16 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் மீனவர் வசீகரன் படகின் எஞ்ஜின் பக்கம் அமர்ந்து கொண்டு வலையில் உள்ள மீன்களை ஆய்ந்துள்ளார்.
இதில் எதிர்பாராத விதமாக வலை எஞ்ஜின் மீது சிக்கி,வலையோடு வசீகரன் தூக்கி வீசப்பட்டுள்ளார். தூக்கி வீசப்பட்ட வசீகரன் எஞ்ஜின் மீதே மோதி தலை பகுதியில் லேசானக் காயத்துடன் நீரில் மூழ்கியுள்ளார்.அதனைத் தொடர்ந்து சக மீனவர்கள் கடலில் குதித்து தேடியுள்ளனர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததையடுத்து, கடலோரக் காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கடலோரக் காவல் படையினர் மற்றும் சக மீனவர்களின் உதவியோடு இரண்டு விசைப்படகு மற்றும் 20க்கும் மேற்ப்பட்ட நாட்டுப்படகுகள் மூலம் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டிருந்தது.
தொடர்ந்து இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த தேடுதல் பணிக்கு பிறகு இன்று காலை மீனவர் வசீகரனின் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட உடல் கரைக்கு கொண்டு வரப்பட்டு, உடற்கூறு ஆய்விற்கு பிறகு அவருடைய சொந்த ஊரில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. வசீகரனின் உடலை பார்த்து உறவினர்கள் கண்ணீர் மல்க கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது.
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று 19 வயது மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் மீன மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu