ஆவுடையார்கோவில் அருகே முத்துக்குடா கடற்பகுதியில் ஆட்சியர் படகில் சென்று ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா முத்துக்குடா கடற்பகுதியில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு படகில் சென்று ஆய்வுசெய்தார்
வருகின்ற 27-ஆம் தேதி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆவுடையார் கோவில் தாலுகா முத்துக்குடா கடற்கரைப் பகுதியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆய்வு மேற்கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலா தலங்கள் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட ஆவுடையார்கோவில் தாலுகா, முத்துக்குடா கடற்பகுதியில் மாவட்ட ஆட்சியர் படகில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்தப் பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் அருகிலுள்ள நாட்டுப் படகு மூலமாக தான் செல்ல வேண்டும். மேலும் அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள் வர்த்தகர்கள் என அனைத்து தரப்பினரும் முத்துகுடா பகுதியில் சுற்றுலாத்தளம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசிற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு , படகு மூலம் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினார்.
ஆய்வின்போது, அறந்தாங்கி கோட்டாட்சியர் மீன்வளத்துறை அதிகாரிகள் சுற்றுலா துறை அதிகாரிகள் நாட்டாணி புரசக்குடி பஞ்சாயத்து தலைவர் சீதாலட்சுமி, வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், கோட்டைப்பட்டினம் காவல்துணை கண்காணிப்பாளர் மனோகரன், மீமிசல் காவல்துறை உதவி ஆய்வாளர் வைத்தியலிங்கம் ஆவுடையார் கோவில் தாசில்தார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உடனிருந்தனர். முத்துக்குடா பகுதியை சுற்றுலாத்தலமாக ஆக்கினால் இப்பகுதியில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள், பெரிதும் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu