மதுபோதையில் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்தவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆலங்குடி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் அரிவாளால் கொத்தி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுனர் ஆனந்தன் (45) என்பவர் மது போதையில், வாக்குச்சாவடி மையத்தில் உள்ள போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இதில் கோபமடைந்த ஆனந்தன் வாக்குச்சாவடி மையத்தின் பின்புறமாக சென்று, தான் வைத்திருந்த அரிவாளால் வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கொத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர். இயந்திரத்தை சேதப்படுத்திய ஆனந்தனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்த சப்கலெக்டர் ஆனந்த்மோகன் சம்பவம் குறித்து ஆய்வு மேற்க்கொண்டார். அதனைத் தொடந்து மாற்று வாக்குபதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக வாக்குப்பதிவு தடையானது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!