ஆலங்குடியில் திடீரென பலத்த காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் சேதம்
ஆலங்குடியில் பலத்த காற்றில் சாய்ந்த வாழை மரங்கள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சூறைகாற்றுடன் பெய்த மழையால் பயிரிடப்பட்டிருந்த வாழை கீழே சரிந்து விழுந்தது. இதனால், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலங்குடி, கறம்பக்குடி தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வறண்ட வானிலையுடன் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் நடமாட்டமின்றி தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், பாசன வசதியின்றி விவசாயப் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டன. இதனால், விவசாயிகள் மலர், வாழை போன்ற பயிர்களுக்கு தெளிப்பு நீர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வந்தனர்.
இந்நிலையில், ஆலங்குடி, கறம்பக்குடி தாலுகாவிற்குட்பட்ட வடகாடு, மாங்காடு, கீரமங்கலம், செரியலூர், கொத்தமங்கலம், சேந்தன்குடி, களபம், மாங்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால், களபம் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டிக்கோன்பட்டியில் பயிரிடப்பட்டிருந்த அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த வாழை சரிந்து விழுந்தன. இதனால், இப்பகுதி விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. எனவே, அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், கொத்தமங்கலம் வாடிமாநகரைச் சேர்ந்தவர் உருமநாதர் (54). இவர் தனது மனைவி சாந்தி (40) மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை வீசிய சூறாவளி காற்றால், இவரது வீட்டருகே இருந்த தென்னை மரம் சரிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் நல்வாய்ப்பாக அனைவரும் உயிர்தப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu