பல கோடி பணத்தை சுருட்டி தலைமறைவான ஊராட்சி மன்ற தலைவர் கைது

2.85 கோடியை ஏமாற்றி தலைமறைவாக இருந்த ஊராட்சிமன்ற தலைவரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி ஆண்டிகுளத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (56). இவர், பாச்சிக்கோட்டை ஊராட்சித் தலைவராக உள்ளார். இவர் மீது 21 மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கோயம்புத்தூரில் உள்ள ராயல் கேர் மல்டி ஸ்பெசாலிட்டி ஆஸ்பத்திரி நடத்தி வரும் மருத்துவர் மாதேஸ்வரன் என்பவருக்கு, 100 கோடி கடன் பெற்று தருவதாகவும், அதற்கு கமிஷன் தொகை 2 கோடி ரூபாயும், ஆவணச் செலவிற்காக ரூ.85 லட்சம் என மொத்தம் 2 கோடியே 85 லட்சம் ரூபாய் மற்றும் கையெழுத்திட்ட காசோலை, கையெழுத்திட்ட அச்சிட பத்திரம் ஆகியவற்றை பன்னீர்செல்வம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் நீண்ட நாட்களாகியும், கடன் தொகையை பெற்றுத் தராத ஊராட்சித்தலைவர் பன்னீர்செல்வத்திடம் பணத்தை திருப்பி கேட்ட போது, மருத்துவர் மாதேஸ்வரைனை மிரட்டியுள்ளார். இதுகுறித்து, கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசில், மாதேஸ்வரன் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார், ஆலங்குடியில் உள்ள பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான 2 வீடு, அவரது 2 பெட்ரோல் பங்க் உட்பட 5க்கும் மேற்பட்ட இடங்களில், கோவை மத்திய குற்றப்பிரிவு காவல் ஆணையர் தீபக் தாமூர் தலைமையிலான உதவி ஆணையர் பார்த்திபன் உள்ளிட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பல கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக தெரிவித்தனர்.

மேலும், 5 தனிப்படைகள் அமைத்து, தலைமறைவான பன்னீர்செல்வதை தேடி வந்தனர். இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்து, ஊராட்சித்தலைவர் பன்னீர்செல்வத்தையும், அவரது ஏஜெண்டாக செயல்பட்டு வந்த செல்வக்குமார் என்பவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்