தமிழகத்தில் மனுநீதி சோழன் ஆட்சி நடைபெறுகிறது : அமைச்சர் மெய்யநாதன் பேச்சு
வீடுகட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி அளிக்கிறார், அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். உடன் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு உள்ளிட்டோர்.
தமிழகத்தில் மனுநீதி சோழன் ஆட்சி நடைபெறுகிறது என்றார் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டைவிடுதி ஊராட்சி, கும்மங்குளம் ஆதிதிராவிடர் காலனி முனீஸ்வரர் கோவில் அருகில் மாவட்ட ஆட்சியர்கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,. சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.6.00 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினை தமிழக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: தமிழகத்தில் மனுநீதி சோழன் ஆட்சி நடைபெற்று வருகிறது. தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்ற ஒரே தாரக மந்திரத்தோடு ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை உறுதி என்கின்ற அடிப்படையில் தமிழக முதலமைச்சர் ஒரு நேர்மையான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.
தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்றதில் இருந்து அதிகமாக கவனம் செலுத்துவது விளிம்பு நிலையில் இருக்கின்ற, அடித்தட்டு மக்கள் எல்லோரும் ஆதிதிராவிடர் மக்கள் என்று அவர் சொல்வார். ஆனால் உலகத்தின் மூத்த குடி தமிழ்குடியின் மூதாதையர்கள் நீங்கள்தான் என்று நான் கூறுவேன்.
உங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது இந்த பகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகின்றது. அதனடிப்படையில் இன்றையதினம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டைவிடுதி ஊராட்சி, கும்மங்குளம் ஆதிதிராவிடர் காலனி முனீஸ்வரர் கோவில் அருகில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.6.00 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கலையரங்கமானது மிகுந்த பயனுள்ளதாக அமையும். மேலும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.2.40 லட்சம் வீதம் என மொத்தம் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டுவதற்கான ஆணைகளும் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிராமப்புறங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கிடவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்.
நிகழ்ச்சியில், ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உஷா செல்வம், ஒன்றியக் குழு உறுப்பினர் சகுந்தலாதேவிராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் அகஸ்டின், வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu