உயிர் காக்கும் குருதிக்கொடை: 55பேர் ரத்ததானம் செய்தனர்

உயிர் காக்கும் குருதிக்கொடை: 55பேர் ரத்ததானம் செய்தனர்
X
ஆலங்குடி அருகே ஒரு கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர்

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாலும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதாலும் இரத்த வங்கிக்கு வந்து இரத்தம் கொடுக்கும் கொடையாளர்கள் எண்ணிக்கை நாள்தோறும் குறைந்து வருகிறது.

அதேபோல பெரும்பாலானோர் தற்போது கொரோனா தடுப்பூசி செலூத்திக் கொண்டு வருவதால் இரத்தம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் அரசு மருத்துவமனைகளில் உள்ள இரத்த வங்கிகளில் போதிய இரத்தம் இல்லாததால் நோயாளிகளுக்கு தேவையான நேரத்தில் இரத்தம் வழங்குவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் நிலவி வருகிறது.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளின் இரத்த வங்கிகளின் அலுவலர்கள் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பாக குருதிக்கொடை அளித்து பல உயிர்களை காக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அந்த வேண்டுகோளை ஏற்கும் வகையிலும் தற்போதைய இக்கட்டான சூழலில் குருதிக்கொடை அளிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தும் வகையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள கொத்தமங்கலத்தில்,ஜேசிஐ கீரமங்கலம் சென்ரல் என்ற தன்னார்வ அமைப்பு மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் நற்பணி மன்றத்தினர், மாவட்ட ரத்த வங்கி, ஆகியோர் இணைந்து இன்று அக்கிராமத்தில் இரத்ததான முகாம் ஒன்றை நடத்தினர்.

இந்த முகாமில் கொத்தமங்கலம், குளமங்கலம், கீரமங்கலம், ஆலங்காடு, மறமடக்கி, சேந்தன்குடி, திருநாளூர் மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்து சுமார் 55 பேர் ரத்ததானம் செய்தனர். இளைஞர்களிடம் பல்வேறு சோதனைகளுக்கு பிறகு புதுக்கோட்டை மாவட்ட ரத்த வங்கி நிர்வாகிகள் ரத்தம் சேகரித்து எடுத்துச் சென்றனர்.

உயிர் காக்கும் ரத்த தானம் முகாம் நடத்தப்படுவதை அறிந்து சேந்தன்குடி, ஆலங்காடு பகுதியை சேர்ந்த இளம் தம்பதிகள் ரத்தம் கொடுக்க ஆர்வமாக வந்திருந்தனர். அதில் பெண்களுக்கு ரத்த அளவு குறைவாக இருப்பதால் அவர்களிடம் ரத்தம் எடுக்கவில்லை. அதனால் ஆர்வமாக வந்த இளம்பெண்கள் கவலையுடன் சென்றனர். ஆனால் அவர்களின் கணவர்களிடம் ரத்தம் எடுக்கப்பட்டது. இப்படி பல தம்பதிகள் ஆர்வமாக ரத்தம் கொடுக்க வந்ததைப் பார்த்து பலரும் பாராட்டினார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!