அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
ஆலங்குடி அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.
ஆய்விற்கு பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதாரமு கூறியதாவது:
விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவித்த நெல்லுக்கு உரிய லாபம் கிடைக்கும் வகையில் இடைதரகர்கள் இன்றி நேரடியாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் பெற்று தொடர்புடைய விவசாயிகளின் வங்கி கணக்குகளிலேயே நேரடியாக அரசால் வரவு வைக்கப்படுகிறது.
அதனடிப்படையில் இன்று ஆலங்குடி தாலுகா, கலிங்கப்பட்டி மற்றும் எஸ்.குளவாய்பட்டி ஆகிய கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணிகள் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தற்பொழுது வரை 99 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் குறுவை சாகுபடியாக 6,198.92 ஹெக்டேர் பரப்பளவில் 37,194 மெ.டன் நெல் கொள்முதல் செய்திட வேளாண்துறையால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக புதுக்கோட்டை மண்டலம் மூலமாக 01.06.21 முதல் தற்பொழுது வரை 34,698 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தையும் மழை நீர் உள்ளிட்ட சேதங்களில் பாதிக்காத வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து சேமிப்பு கிடங்குகளுக்கு கடந்த ஒருவார காலமாக இயக்கம் செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் இதுவரை அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 31,000 மெ.டன் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே தொடர்ந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை அருகில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடையலாம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu