ஆலங்குடி தொகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைப்பு
பூவரசக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்.
சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய நலத் திட்டங்களை துவக்கி வைத்தும், பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் தொடக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், பூவரசக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதிமேம்பாட்டு நிதியின்கீழ், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தினை சுற்றுச்சூழல் மாற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று திறந்து வைத்தார்.
பின்னர், அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், பூவரசக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பூவரசக்குடியில் தேசிய வாழ்வாதார இயக்கத் திட்டத்தின்கீழ், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள துணை சுகாதார நிலையக் கட்டடம், வல்லத்திராக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள செவிலியர் குடியிருப்புக் கட்டடம், பாலையூரில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள துணை சுகாதார நிலையக் கட்டடம் ஆகிய கட்டடங்களுக்கு பூமி பூஜை நடத்தி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, வல்லத்திராக்கோட்டையில் ரூ.16.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் மெய்யநாதன். பின்னர், பாச்சிக்கோட்டையில் கருப்பையா என்பவர் தன்னுடைய நிலத்தில் உள்ள தைல மரங்களை அகற்றி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பழ மரங்கள் நடவு செய்தமைக்காக, நேரடியாகச் சென்று கருப்பையாவுக்கு சால்வை அணிவித்து அமைச்சர் மெய்யநாதன் பாராட்டு தெரிவித்தார். பெரியநாயகிபுரத்தில் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம் மற்றும் மரம் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.
இதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் திராவிடச்செல்வன், துணை இயக்குநர்(சுகாதாரப் பணிகள்) கலைவாணி, ஒன்றியக்குழுத் தலைவர்கள் வள்ளியம்மை தங்கமணி, மகேஸ்வரி சண்முகநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உஷா செல்வம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu