புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று பள்ளிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பள்ளிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், மைலன்கோன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நூறுநாள் வேலைத் திட்டப் பணியாளர்களை கொண்டு பள்ளிவளாகம் தூய்மை செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனை பார்வையிட்டு அங்குள்ள தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் ஆலோசனை வழங்கினார்.
பின்னர், கல்லாக்கோட்டை அரசு மேலநிலைப்பள்ளியில் உள்ள உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் நடைபெற்ற வினாடி வினா தேர்வினை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் நடைபெற்ற அரசு ,அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி,மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பேசியதாவது:ஒவ்வொரு பள்ளியிலும் தேவைக்கு ஏற்ப போதுமான அளவில் முகக்கவசம் இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திடல் வேண்டும். போதுமான அளவில் மாணவர்கள் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்வதற்கு ஏற்றவாறு வசதிகள் செய்திட வேண்டும். பள்ளியின் நுழைவு வாயிலில் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை (தெர்மல் ஸ்கேனர் மூலம்) எடுக்க தேவையான வசதிகள் செய்திட வேண்டும்.
ஒவ்வொரு நாளும் (ஒரு வார்த்தில்) பள்ளிக்கு வருகை தர இருக்கின்ற மாணவர்கள் விவரங்கள் இருக்க வேண்டும். மாணவர் எண்ணிக்கை அதிக அளவில் இருந்து, வகுப்பறைகள் குறைவாக இருந்தால் சுழற்சி முறையில் கற்றல் செயல்பாடுகள் நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதி செய்திடல் வேண்டும் என்றார். புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மஞ்சுளா,பள்ளித் துணை ஆய்வாளர் குரு.மாரிமுத்து ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார். கூட்டத்தில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு,அரசு உதவி பெறும் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu