இனி என்ன வேண்டுமானாலும் நடக்கும்-மு.க.ஸ்டாலின்

பெங்களூரிலிருந்து அதிமுக கொடியுடன் ஒருவர்‌ வருகிறார் இனி என்ன வேண்டுமானாலும் நடக்கும் என புதுக்கோட்டையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

புதுக்கோட்டையில் இன்று (பிப். 8) நடைபெற்ற திமுக சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் சந்திரசேகரன் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். மணமக்களை வாழ்த்திய பின்னர் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 3 மாதத்தில் திமுக ஆட்சியில் அமர உள்ளது. அதற்கு அடிப்படையாக அனைத்து தொகுதிகளிலும் மக்களின் குறைகளை கேட்க வேண்டும் என திமுக வியூகம் அமைத்து பிரச்சாரம் செய்து வருகிறது.

200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஏற்கெனவே தெரிவித்து இருந்தேன். ஆனால், தற்போதைய சூழலைப் பார்க்கும்போது 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தவழ்ந்து வந்து தமிழகத்தின் முதல்வராக பழனிசாமி வந்தாரா? இல்லையா?. இதை அவர் மறுத்தால் எனது கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். பெங்களூருவில் இருந்து ஒருவர் கொடியுடன் புறப்பட்டு விட்டார். என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை. ஆனால், நடக்க வேண்டியது நடக்கும். இதில், எந்த மாற்றமும் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.

அது போல் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மங்களாகோவிலில் கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார். பின்னர் அவர் பேசுகையில்:- கொரோனா காலத்திலும் கமிஷன் பார்த்து கொள்ளையடிக்கிற ஆட்சியாக தற்போதைய அதிமுக ஆட்சி உள்ளது.

கொரோனா காலத்தில் எதிர்கட்சியாக இருந்து கொண்டு எந்த கட்சியும் செய்யாத அளவிற்கு பல நிவாரணத்தை வழங்கியது திமுக தான்.விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று நான் சொல்லியவுடன் அது திமுகவிற்கு சாதகமாக முடிந்து விடும் என்பதற்காக விவசாய கடன் தள்ளுபடி என்று தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். கருணாநிதி முதலமைச்சராக பதவியைத் தந்தது எம்ஜிஆர் தான் என்று தவறான செய்தியை சொல்லி வருகிறார். முறைப்படி அனைத்து எம்எல்ஏ,க்களின் ஆதரவையும் பெற்று கருணாநிதி முதலமைச்சரானார்.

ஆனால் தற்போதைய முதலமைச்சர் பழனிச்சாமி கூவத்தூரில் ஆட்களை வைத்தார். அதிலும் முதலமைச்சர் பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து 18 பேர் மனு கொடுத்தார்கள். அப்படி உள்ள நிலையில் இவர் முதலமைச்சர் ஆனதை பற்றி சொன்னால் கோபம் வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ai solutions for small business