மீனவர்கள் உடலுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அஞ்சலி

இலங்கை கடற்படையால் மோதி படகு கவிழ்ந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் 4 மீனவர்களின் உடல்களும் இன்று மதியம் கோட்டைப்பட்டினம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தன. அமைச்சர் விஜயபாஸ்கர், மீனவர்கள் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியா (30), ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகராஜன் (52), மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த சாம்சன்டார்வின் (28), திருப்புல்லாணியைச் சேர்ந்த செந்தில்குமார் (32) ஆகிய 4 பேரும் கடந்த 18ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகுத் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.கடந்த 20ஆம் தேதி காலை கரை திரும்பியிருக்க வேண்டிய இவர்களின் படகு திரும்பாததால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கைக் கடற்படைப் படகு மோதியதால்தான் இவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இலங்கைக் கடற்படை மீட்புக் குழுவினர் தேடுதல் பணியைத் தொடங்கினர். 20ஆம் தேதி இரவு இரு சடலங்களும், 21ஆம் தேதி பகலில் இரு சடலங்களும் அவர்களால் மீட்கப்பட்டன. இலங்கையில் சட்டப்பணிகள் முடித்த பிறகு 4 பேரின் உடல்களும் இன்று காலை இலங்கையில் இருந்து எடுத்து வரப்பட்டன.சடலங்களைப் பெற்று வருவதற்காக கோட்டைப்பட்டினத்தில் இருந்து இரு படகுகளில் மீனவர்களும், மீன்வளத்துறை அலுவலர்களும் கடலுக்குச் சென்றனர். இந்திய கடல் எல்லையில் 4 பேரின் உடல்களும் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.
இதையடுத்து உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்களும் கோட்டைப்பட்டினத்துக்கு பிற்பகல் 2.30 மணி அளவில் கொண்டு வரப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் கோட்டைப்பட்டினம் சென்றனர்.அங்கு மீனவர்களின் உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ராமநாதபுரத்தில் இருந்து வந்த மீனவர்களின் உறவினர்கள் சடலங்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu