கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவுச் சின்னம்: பொதுமக்களிடம் கருத்து கேட்பு
கருணாநிதி நினைவிடத்தில் அமையவுள்ள பேனா நினைவுச்சின்னம் - மாதிரி படம்
கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ம் தேதி முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய வாயில் அமைத்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் கட்டி முடிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.
இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக பொதுமக்களின் கருத்தை கேட்க அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி கருத்து கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் அடுத்த மாதம் (ஜனவரி) 31-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த திட்டத்திற்கான வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை மற்றும் அதன் செயல்முறை திட்ட சுருக்கம் அவசர கால செயல் திட்டங்கள், பேரிடர் மீட்பு திட்டம் குறித்த விவரங்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கிண்டி மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங் அலுவலகம், ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது.
கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்கள் இந்த திட்ட விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu