சென்னையில் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள்
செவிலியர்களை கைது செய்யும் போலீசார்.
சென்னையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டத்திற்கு அதிகாலையில் வந்தவர்களை காவல் துறையினர் அனுமதிக்காததால் கோஷங்களை எழுப்பி சாலை மறியல் செய்வதாக தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து எம்ஆர்பி செவிலியர்கள் வளாகத்திற்குள் செல்வதற்கு காவல் துறையினர் வாயில் கதவுகளைத் திறந்து விட்டனர். பின்னர் செவிலியர்கள் தங்களின் போராட்டத்தைத் தொடங்கினர்.
தொகுப்பு ஊதியத்தில் இருந்து காலமுறை ஊத்தியத்திற்கு ஈர்க்கப்பட்ட செவிலியர்கள் பெரும்பாலானவர்களுக்கு 4 வருடங்களுக்கு மேல் பணி வரன்முறை செய்யப்படாமல் உள்ளது.
கொரோனா தொற்று காலக்கட்டத்தில் சிகிச்சை வழங்க போட்டித் தேர்வின் மூலம் பணி அமர்த்தப்பட்ட செவிலியர்கள் சுமார் 2,500 பேர் இரண்டரை ஆண்டுகள் பணி முடித்தபின், எந்த முன்னறிவிப்புமின்றி ஒரே நாளில் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
24 மணிநேரமும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தன்னலமின்றி மருத்துவ சிகிச்சை மற்றும் மகப்பேறு சேவை வழங்கும் தொகுப்பு ஊதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு அவசர மற்றும் அத்தியாவசிய விடுப்புகளும் மறுக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களின் பணிநேரம் வரையறுக்கப்பட்ட நேரத்தை விட அதிகரிக்கப்பட்டு, 12 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை பணி செய்வதுடன், செவிலியர்களுக்கு தொடர்பில்லாத Online Reports உள்பட அதிகபடியான பணிச்சுமை திணிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு போன்ற எந்த பலனும் கிடைப்பதில்லை.தற்போது தமிழ்நாட்டில் சுமார் 17,000 நிரந்தரப் பணி இடங்களும், 13,000 தொகுப்பு ஊதியப் பணி இடங்களும் உள்ளன. 40 சதவீதத்திற்கும் மேல் நிரந்தரத் தன்மையற்ற தொகுப்பு ஊதிய செவிலியர் பணி இடங்களாகவே உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 1,400 நிரந்தர செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள சுமார் 8,500 செவிலியர்கள் NHM திட்டத்தின் தொகுப்பு ஊதிய முறையில் பணி செய்கின்றனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு நிரந்தர செவிலியர் கூட பணியில் இல்லை. தற்போது புதிதாக தொடங்கப்பட்டு உள்ள 1,000 படுக்கை எண்ணிக்கை கொண்ட கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் செவிலியர் பணி இடங்கள் தேசிய மருத்துவ கமிஷன் NMC பரிந்துரைகளைப் பின்பற்றாமலும், ஏற்கனவே பொது சுகாதாரத்துறையில் இருந்த Merter Staff Nurse பணி இடங்களை சரண் செய்து 60 நிரந்தரப் பணி இடங்களை உருவாக்கி உள்ளது அரசு.
தொகுப்பு ஊதிய செவிலியர்களுக்கு ஆண்டுதோறும் முறையாக பணி இடமாற்ற கலந்தாய்வு நடத்தப்படுவதில்லை. அரசு மருத்துவமனைகளில் நிரந்தரத் தன்மையுடைய பணியாளர்களை மட்டுமே பணி அமர்த்த வேண்டும் என்று பல உச்ச நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும், தற்போது தமிழ்நாடு அரசு செவிலியர்களை நிரந்தரத் தன்மையற்ற ஒப்பந்த முறையில் மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலமாக பணி அமர்த்தி வருகிறது. இது மருத்துவத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதைக் காட்டுகிறது.
தேசிய மருத்துவ கமிஷன் NMC மற்றும் இந்திய பொது சுகாதார தர நிர்ணயங்கள் IPHS ஆகியவற்றின் பரிந்துரைகளின் படி, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர் எண்ணிக்கை இல்லை. அந்த பரிந்துரைகளில் நான்கில் ஒரு பகுதி பணி இடங்கள் (நிரந்தர பணியிடம் மற்றும் தொகுப்பு ஊதிய பணியிடம்) மட்டுமே உள்ளன.இதனால் அரசு மருத்துவமனைகளில் செவிலியர் சேவை வழங்குவதில் குறைபாடுகள் ஏற்பட வாய்புகள் உள்ளது. இருந்தாலும் செவிலியர்களின் கடினமான உழைப்பினால் அந்த குறைகள் எதும் இன்றி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய மருத்துவ கமிஷன் பரிந்துரைகளின் படி, நிரந்தரத் தன்மையுடைய செவிலியர் பணியிடங்கள் உருவாக்கினால் இன்னும் தரமான சிகிச்சை வழங்க முடியும். இதனால் கிராமப்புற மக்கள் மிகவும் பயனடைவர். புதிதாக தொடங்கப்பட்டு உள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இரண்டாம் கட்டமாக நிரப்பப்பட வேண்டிய செவிலியர் பணி இடங்கள் இன்று வரை நிரப்பப்படாமல் உள்ளது.கடந்த 13.4.2022 அன்று துறையின் முதன்மைச் செயலாளர் தலைமையில் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப IPHS மற்றும் NMC பரிந்துரைகளின் படி நிரந்தர பணியிடங்கள் உருவாக்கி பணி நிரந்தரம் செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
திமுக தேர்தல் வாக்குறுதி 356-இல் தொகுப்பு ஊதிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறி இருந்தது ஆனால் இன்று வரை நிறைவேற்றவில்லை. போராடி பெற்ற மகப்பேறு விடுப்பு தற்போதைய திமுக ஆட்சியில் மறுக்கப்பட்டதுடன் மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் பெற்றவர்களிடமிருந்து அந்த ஊதியத்தையும் திரும்ப பெற உத்தரவிடப்பட்டு உள்ளது.நீதிமன்றத்தால் “சமவேலைக்கு சம ஊதியம்” வழங்க உத்திரவிட்டும் அந்த உத்தரவினை நீர்ந்து போகும் விதமாக பொய்யான அறிக்கை தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்பித்து உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் நடத்திய எல்லா போராட்டங்களிலும் பங்கு பெற்று நமது போராட்டங்களுக்கு ஆதரவு தந்த திமுக முன்னணி நிர்வாகிகளும், அமைச்சர்களும் தற்போது மவுனம் காக்கின்றனர்.
அன்று போராட்டங்களை நியாயமானது என்று அறிக்கை விடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது அமைதி காக்கும் நிலையில், நாம் போராடி பெற்ற உரிமைகளையும் ஒவ்வொன்றாக இழக்கும் நிலையில் இருக்கின்றோம் என பல்வேறு கோரிக்கைகளை செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட எம்ஆர்பி செவிலியர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu