நடைமுறையில் விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31-வரை நீட்டிப்பு
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, திருவிழாக்கள், அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31-வரை நீட்டித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விபரங்களவான:
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, நடைமுறையில் உள்ள கோவிட்-19 கட்டுப்பாடுகளை, 15.09.2021 காலை 6.00 மணி வரை நீட்டித்து ஏற்கெனவே அரசு ஆணையிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 27.5.2021 அன்று 36,000-க்கும் மேற்பட்ட அளவில் இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது நாள் தோறும் சுமார் 1600 புதிய நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது.
தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளாலும், நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாகவும், நோய்த் தொற்று படிப்படியாக குறைந்துள்ளது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் தினசரி எண்ணிக்கை சற்று உயர்ந்தும் காணப்படுகிறது. மேலும், தற்போது அண்டை மாநிலமான கேரளாவில் நிஃபா வைரஸ் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நிஃபா வைரஸ் நோயின் தாக்கம் ஏற்படாதவாறு, மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கேரளாவில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அம்மாநிலத்துடனான பேருந்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சிறப்பு அறிக்கை:
மேலும், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறுவனத்தால் (NIDM) அமைக்கப்பட்ட சிறப்பு குழுவின் அறிக்கையில், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நாட்டில் கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது என்றும், நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், தடுப்பு ஊசி போடுவது தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாக்களுக்கான தடை:
திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு தடைகள் தொடர்கின்றன. இது போன்ற நிகழ்வுகள் நோய் தொற்றை தீவிரமாக பரப்பக்கூடிய நிகழ்வுகளாக (Super Spreader Events) மாறக்கூடும். எனவே, கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டும், அண்டை மாநிலமான கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா மட்டுமின்றி, நிஃபா வைரஸ் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதி, அதிகப்படியான பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளான திருவிழாக்கள், அரசியல், சமூகம் சார்ந்த மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தற்போது உள்ள தடை அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி வரை தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது.
நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்:
நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கடண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் (Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) ஆகிய கோட்பாடுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.
• கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், கீழ்க்கண்ட நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக நோய்த் தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.
அனுமதிக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகள் தொடர்புடைய துறைகளால் கண்டிப்பாக அமல்படுத்தப்படுத்தப்பட வேண்டும்.
மாணவர் நலன்:
மாணவ, மாணவியர்களின் கல்வி மற்றும் உளவியல் நலன் பேணும் வகையில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளும், கல்லூரிகளும் சுழற்சி முறையில் உரிய கெரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஆசியர்கள் மற்றும் பெற்றோர்களின் கட்டுப்பாடான ஒத்துழைப்புடன் இயங்கி வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் அனைத்து நோய்பரவல் தடுப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு உள்ளாட்சி பொறுப்பாளர்கள், மருத்துவத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மக்களுக்கு வேண்டுகோள்:
கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், மூன்றாம் அலை ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், பொது மக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாடுமாறும் பொது போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டும் பயன்படுத்துமாறும் கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை முற்றிலும் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம்
பின்பற்றுமாறும், வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லும் போது கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைபிடிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
கொரோனா நோய்த் தொற்று மேலாண்மைக்கான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு
நல்கி கொரோனா தொற்றின் மூன்றாம் அலை தமிழ்நாட்டில் ஏற்படா வண்ணம் தடுத்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று முதலமைச்சர் தனது அறிவிப்பில் தெரியப்படுத்தியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu