உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவு: பெண்அலுவலர்களின் பிரச்னைகள்
மாதிரி படம்
அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடைபெறவுள்ளது. ஊரக தேர்தல் என்பதால், நான்கு பதவிகளுக்கு வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யவுள்ளனர். எனவே கூடுதல் பணியாளர்கள் தேவை என்பதால், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
முதல் கட்ட தேர்தல் அக்டோபர் 6 நடைபெறுகிறது. அன்று மகாளய அமாவாசை. அன்று முன்னோர்களுக்கு வழிபாடு செய்பவர்கள் உள்ளனர். ஆனால், தேர்தல் தேதியை முடிவு செய்தவர்கள் இதனை கருத்தில் கொள்ளவில்லை. அந்த தேதியில் வாக்குப்பதிவு நடைபெறுவதால், முன்னோர் வழிபாடு செய்பவர்கள் எவ்வாறு செய்வது என குழம்பியுள்ளனர்.
இதைவிட மிகவும் சிரமப்படப்போவது பெண்கள் தான். தேர்தல் பணி என்றாலே, அதிகம் சிரமம் அனுபவிப்பது பெண் ஊழியர்கள் தான், அது எந்த தேர்தலாக இருந்தாலும் சரி.
தற்போது மாவட்டத்தில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெறுவதால், இரண்டு நாட்களுக்கு அவர்கள் செல்ல வேண்டும். மாவட்டத்தில் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு சென்று பணிபுரியவிருப்பதால், அவர்கள் படப்போகும் பாடுகள் சொல்லி மாளாது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதால், அவர்கள் முதல்நாள் இரவே சம்பந்தப்பட்ட வாக்குசாவடிக்கு செல்ல வேண்டும். அவர்களுக்கான வாக்கு சாவடி விபரம் முதல்நாள் தான் அளிக்கப்படும். அது எங்கு உள்ளது, எப்படி செல்வது என்பது குறித்து அவர்களே விசாரித்து செல்ல வேண்டும், அந்த பகுதிகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை தேர்தல் ஆணையம் கவனிப்பதில்லை. சாவடிகளை அடைய அதிகாரிகள் தங்கள் சொந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
அங்கு சென்றால், அவர்கள் தங்குவதற்கு, காலையில் காலைக்கடன் கழிக்க, குளிக்க அங்கு என்ன வசதிகள் இருக்கிறது என தெரியாது. கிராமப்புறம் என்பதால், அதற்காக வசதியும் குறைவாகவே இருக்கும்.
அதிகாலையில் எழுந்து, 4 மணியளவில் அவர்கள் குளித்து கிளம்ப வேண்டும், 10 அதிகாரிகளும் கிளம்ப வேண்டும் என்றால், அதிகாலையில் அந்த குளிரில் தான் குளிக்க வேண்டும். 11 மணி நேர பணி செய்யப்போகும் ஒருவருக்கு முதல்நாள் ஓய்வு என்பது இருக்காது.
மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு என்பதால், வாக்குப்பெட்டிகள் எடுத்துக்கொண்டு சென்ற பின்னரே அவர்கள் பணியிலிருந்து திரும்ப முடியும். அதன் பின்னர் அவர்கள் வீடு திரும்ப எவ்வளவு நேரம் ஆகும் என தெரியாது. அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை தேர்தல் ஆணையம் செய்து கொடுக்குமா என்றால் அதுவும் கிடையாது.
உதாரணமாக. அரக்கோணத்தில் உள்ள பள்ளி ஆசிரியர் 6ம் தேதி வாக்குப்பதிவிற்கு திமிரி அருகே உள்ள கிராமத்திற்கு செல்லவேண்டும் என்றால், 5ம் தேதி மாலையே அங்கு சென்றுவிட வேண்டும். தேர்தல் முடித்து அவர்கள் அரக்கோணம் வருவதற்கு போக்குவரத்து வசதிகள் உள்ளதா என்றால் அது கேள்விக்குறியே.
ஆண்கள் என்றால் எவ்வாறாயினும் சமாளித்துக் கொண்டுவிடுவர். ஆனால், பெண்கள் பாடு, சொல்லி மாளாது. ஒரு பள்ளியில் இருந்து அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு சென்றாலும், அவர்கள் ஒரே ஊரில் இருப்பார்கள் என கூற முடியாது. எத்தனை மணிக்கு பணி முடியும் எனவும் தெரியாது என்பதால், அவர்கள் தனிப்பட்டமுறையில் வாகனங்களை வாடகைக்கு எடுக்கவும் முடியாது.
மேலும், பணிமுடித்து திரும்ப இரவு ஆகிவிடும் என்பதால் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது. முன்பெல்லாம் 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து இரவு 10 மணிக்குள் வீடு திரும்ப முடிந்தது. ஆனால், இந்தமுறை வாக்குப்பதிவே 6 மணி வரை என்பதால், எப்போது திரும்புவோம் என திகைத்து நிற்கின்றனர் ஆசிரியைகள்.
எனவே, தங்கள் நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் சில வசதிகளை செய்து தர வேண்டும் என பெண் அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- ஒரே பள்ளியில் இருந்து பணிக்கு வந்துள்ள ஆசிரியர்களை, ஒரு குழுவாக ஒரே வாக்கு சாவடியில் பணியமர்த்த வேண்டும். குறைந்தபட்சம் நான்கு ஆசிரியர்கள் அங்கு பணியில் இருந்தால், பணி முடித்து அவர்கள் குழுவாக வீடு திரும்ப முடியும்.
- தொலைவில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதியுள்ள வாக்குசாவடிகளில் பணியமர்த்த வேண்டும்.
- பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு அருகில் உள்ள பேருந்து நிலையம் வரை போக்குவரத்து வசதியை தேர்தல் ஆணையம் செய்து தர வேண்டும்.
- பணி ஒதுக்கீடு முறையை கணினி மூலம் மேற்கொள்ளாமல், ஒரே பள்ளி ஆசிரியர்களை ஒரே இடத்தில் பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவற்றையெல்லாம் மேற்கொண்டால், பெண்களுக்கான பாதுகாப்பும் கிடைக்கும், அவர்களும் மனஅழுத்தம் இன்றி பணிகளை மேற்கொள்ள முடியும்.
அரசும், தேர்தல் ஆணையமும் சிந்திக்குமா?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu