தமிழகத்தின் வளர்ச்சிகாக பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்தி வருகிறார்: ஜெ.பி. நட்டா
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் சி.சரஸ்வதியை ஆதரித்து நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா பேசியதாவது,
தமிழ் மொழி மிகப்பழமையானது. தமிழ் கலாச்சாரம் போற்றுதலுக்குரியது. எனவே தான், பிரதமர் மோடி சர்வதேச அளவிலான கூட்டங்களில் கூட தமிழ்மொழியின் சிறப்பை, கலாச்சாரத்தை பெருமைப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் பேசும்போது, யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற அற்புதமான வரியைக் குறிப்பிட்டார்.
நாட்டின் வளர்ச்சிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலில் போட்டியிடுகிறது. ஆனால், திமுக – காங்கிரஸ் கூட்டணி அவர்களின் குடும்பத்தின் வளர்ச்சிக்காக போட்டியிடுகின்றன. திமுக, காங்கிரஸ்க்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை. குடும்ப ஆட்சியின் மீது தான் நம்பிக்கையுள்ளது. இதனால்தான் இந்த இரு கட்சிகளையும், தமிழக மக்களும், இந்திய மக்களும் ஒதுக்கி வைத்துள்ளனர். இந்த தேர்தலிலும் அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும்.
திமுக காங்கிரஸ் ஆட்சி வந்தால் ஊழல் அதிகரிக்கும். திமுக– காங்கிரஸ் கூட்டணியில் நடந்த 2ஜி என்பது மாறனின் இரு தலைமுறையின் ஊழல், 3ஜி என்பது ஸ்டாலின் குடும்பத்தினர் செய்யும் மூன்று தலைமுறை ஊழல், 4 ஜி என்பது காங்கிரஸ் காந்தி குடும்பத்தின் நான்கு தலைமுறை செய்த ஊழலாகும். திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழல், குடும்ப அரசியல், கட்டப்பஞ்சாயத்து அதிகரிக்கும். திமுகவைப் புறக்கணிக்க இது சரியான நேரமாகும்.
திமுகவின் முன்னணி தலைவர்கள் பெண்களுக்கு எதிராகவும், ஆதிதிராவிடர்களுக்கு எதிராகவும் பேசி அவமானப்படுத்துகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் அவதூறாகப் பேசியுள்ளனர். அவர்கள் விரக்தியின் உச்சிக்குச் சென்றுள்ளனர். ஆட்சியில் இல்லாத போதே இவ்வாறு பேசும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்? அவர்களுக்கு தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். மாநில மக்களின் நம்பிக்கைகளை மதிக்காமல், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஜல்லிக்கட்டுக்கு அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தடை விதித்தார். திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால், தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட பிரதமர் மோடி, ஜல்லிக்கட்டுக்கான தடையை சிறப்பு சட்டம் மூலம் நீக்கினார்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பின்பு, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. பட்டியல் இருந்த ஜாதிகளை இணைத்து, தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் என சட்டபூர்வ அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. யாழ்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி, அங்கு வாழும் தமிழக மக்களுக்கு வீடுகளை கட்டித் தந்துள்ளார். அத்தோடு, இலங்கைத்தமிழர்கள் சுதந்திரமாக வாழ தேவையான நடவடிக்கைகளை மோடி எடுத்துள்ளார்.
கந்த சஷ்டி கவசத்தை அவதூறாகப் பேசிய கருப்பர் கூட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை. தமிழக பாஜக இதனைக் கண்டித்து வேல்யாத்திரை நடத்தியது. பாஜகவின் இந்த யாத்திரைக்குப் பின், கடவுள் மறுப்பு கொள்கை பேசிய ஸ்டாலின் கையில் வேல் பிடித்து பிரச்சாரம் செய்கிறார். இது தமிழக பாஜகவிற்கு கிடைத்த வெற்றி.
தமிழகத்தின் வளர்ச்சிகாக பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்தி வருகிறார். மத்திய அரசின் 13வது நிதிக்குழு தமிழகத்திற்கு 94 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி பொறுப்பேற்ற பின் நான்கரை மடங்கு அதிகமாக, 14 -வது நிதிக்குழுவில் தமிழகத்திற்கு 5 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. தமிழரான நிர்மலா சீதாராமனுக்கு ராணுவம், நிதி ஆகிய முக்கியத்துறைகளை பிரதமர் மோடி ஒதுக்கினார். வெளியுறவுத்துறை அமைச்சாராக தமிழரான ஜெய்சங்கர் நியமிக்கப்படுள்ளார்.
இதுமட்டுமல்லாது 7 லட்சம் கோடியில் அமையவுள்ள ராணுவ தளவாட உற்பத்தி மையம் மூலம், சென்னை, கோவை, ஒசூர், சேலம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரும். தேசிய கல்விக் கொள்கை மாற்றப்பட்டு, எட்டாம் வகுப்பு வரை தாய்மொழியான தமிழில் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டம், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி, அதிக எண்ணிக்கையில் முத்ரா கடன் என தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் நில அபகரிப்பு, குண்டர்கள் அராஜகம், மின்வெட்டு, மத உணர்வுகளைப் புண்படுத்துதல், ஊழலைத் தடுக்க வேண்டுமானால் அதிமுக -பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu