/* */

விண்ணை முட்டும் காய்கறி: மளிகை பொருட்கள் விலை: மக்கள் தவிப்பு

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக காய்கறிகளின் விலை உச்சத்தில் இருந்து வரும் நிலையில் மளிகை பொருட்கள் விலையும் அதிகரித்துள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தவித்து வருகின்றனர்

HIGHLIGHTS

விண்ணை முட்டும் காய்கறி: மளிகை பொருட்கள் விலை: மக்கள் தவிப்பு
X

கோப்பு படம் 

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக காய்கறிகளின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளியின் விலை சில்லரை விற்பனை செய்யும் மளிகை கடைகளில் 110 -ஐ தாண்டி இருக்கும் நிலையில் மற்ற காய்கறிகளின் விலையும் 100 ரூபாயை நெருங்கியே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விலை உயர்வு காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் காய்கறிகளை பார்த்து பார்த்து வாங்கி பாதுகாத்து பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தக்காளிப்பழம் இல்லாமல் சாம்பார் வைப்பது சாத்தியமா? என்கிற குழப்பமான கேள்வியோடு குடும்பத் தலைவிகள் சமீப காலமாக தக்காளி பழத்தை தவிர்த்து விட்டே சாம்பார் வைத்து வருகிறார்கள்.

தக்காளி பழத்தை போன்று கத்தரிக்காய், பீன்ஸ், கேரட், சின்ன வெங்காயம் போன்ற காய்கள் அனைத்தின் விலையுமே சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.


இதனால் கால் கிலோ அளவுக்கு காய்கறி வாங்க வேண்டும் என்றால் 25 ரூபாய் செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு குடும்பத் தலைவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒரு நாளைக்கு சாம்பார் வைக்க வேண்டும் என்றால் குறைந்தது 100 ரூபாய் செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விலை ஏற்றத்துக்கு பக்கத்து மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து முற்றிலுமாக குறைந்து போனதே காரணம் என்கிறார்கள் காய்கறி மொத்த வியாபாரிகள்.

தமிழகத்தின் காய்கறி தேவையை ஆந்திரா, கர்நாடக மாநிலங்களே பூர்த்தி செய்து வருகின்றன. தமிழகத்தில் விவசாயத் தொழில் தேய்ந்து போன நிலையில் ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் லாரி லாரியாக கோயம்பேட்டில் குவியும் காய்கறிகளே சென்னை மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

ஆனால் இந்த இரண்டு மாநிலங்களிலும் இருந்து காய்கறிகளின் வரத்து குறைந்து போனதால் கடந்த ஒரு மாத காலமாக இந்த விலை உயர்வு நீடித்து வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரையில் விவசாயம் என்பது பெயரளவுக்கு மட்டுமே நடைபெறுவதாகவும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் விவசாய பணி என்பது மிகவும் குறைவாகவே நடைபெறுவதாகவும் வியாபாரிகள் கூறுகிறார்கள்.

கோயம்பேடு மார்க்கெட்டில் 50-ல் இருந்து 60 ரூபாய் வரையில் விற்கப்படும் ஒரு காய்கறியின் விலை மளிகை கடைக்கு விற்பனைக்காக வரும்போது மேலும் உயர்ந்து விடுகிறது.

லாரி வாடகை, கூலி என அனைத்தையும் கொடுத்து விட்டு சில்லறை கடைகளில் பொதுமக்களின் கைக்கு போய் காய்கறிகள் சேரும்போது அதன் விலை 80 லிருந்து 90 ஆக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாகவே பொதுமக்கள் அதிக விலை கொடுத்து காய்கறிகளை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள்.

ஊட்டியில் இருந்து கேரட் மட்டுமே 70 சதவீதம் அளவுக்கு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருகிறது. மற்றபடி தமிழகத்தில் இருந்து வரும் காய்கறிகளின் அளவு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.

தென் மாவட்டங்களில் இருந்து முருங்கைக்காய் மட்டுமே போதுமான அளவுக்கு வந்து கொண்டிருக்கிறது. வேறு எந்த காய்கறிகளும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து கோயம்பேடுக்கு அதிகமாக வருவதில்லை என்பதையும் வியாபாரிகள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இந்த காய்கறிகள் அனைத்தும் மே மாதம் வரையில் கிலோ 10 ரூபாய்க்கே விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

ஆனால் அடுத்தடுத்து பெய்த மழை சேதங்களால் ஆந்திரா, கர்நாடகாவில் விவசாய தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு விளைச்சல் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதுவே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அதிக அளவில் உணவு பொருட்கள் கிடைக்கும்போது அதனை சேமித்து வைத்திருந்தால் இதுபோன்ற பாதிப்புகள் இருந்திருக்காது என்கிற குற்றச்சாட்டையும் வியாபாரிகள் முன்வைக்கிறார்கள். எனவே வரும் காலங்களில் காய்கறிகள் கிடைக்கும்போது அதனை எத்தனை நாட்கள் சேமித்து வைக்க முடியுமோ அத்தனை நாட்கள் சேமித்து வைக்க வேண்டும் என்பதே வியாபாரிகள் மத்தியில் எழுந்துள்ள கோரிக்கையாகவும் உள்ளது.

இந்த விலை உயர்வு என்பது இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் விவசாயத்தொழில் வெகுவாக குறைந்து போனதே இதற்கு காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள். இப்படி காய்கறி தேவைக்காக வெளி மாநிலங்களையே நம்பி இருக்கும் நிலையில் அங்கு முற்றிலுமாக விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டு விட்டால் தற்போது இருப்பதை விட அதிக விலை உயர்வை நாம் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் வியாபாரிகள்.


காய்கறி விலை இப்படி விண்ணை முட்டும் அளவுக்கு கூடிக்கொண்டே செல்லும் நிலையில் மளிகை பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது. துவரம் பருப்பு தொடங்கி அனைத்து மளிகை பொருட்களுமே கடுமையாக விலை உயர்ந்துள்ளது. இப்படி காய்கறி, மளிகை பொருட்களின் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் தவியாய் தவித்து வருகிறார்கள்.

ஒரு கிலோ தக்காளி ரூ.110-ல் இருந்து ரூ.120 வரை மளிகை கடைகளில் விற்பனையாவதால் அதனை வாங்கி சமையலுக்கு பயன்படுத்த தயங்கி வருகிறார்கள். இதேபோன்று சின்ன வெங்காயத்தின் விலையும் ஒரு மாதத்துக்கும் மேலாக ரூ.100-ஐ தாண்டியே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பச்சை மிளகாய், பீன்ஸ், முள்ளங்கி என அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தனை காய்கறிகளின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளதால் காய்கறிகளின் விலை எப்போது குறையும் என்கிற எதிர்பார்ப்பும் ஏக்கமும் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் எழுந்துள்ளது. பல வீடுகளில் தக்காளி, சின்ன வெங்காயத்தை மறந்தே போய் விட்டனர். தக்காளிப் பழத்துக்கு பதில் புளியையும், சாம்பார் வெங்காயத்துக்கு பதில் பல்லாரி வெங்காயத்தையும் பயன்படுத்தி வருகிறார்கள்.

காய்கறிகளின் விலை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு மாதமோ அல்லது 2 மாதமோ ஆகலாம் என்பதால் அதுவரை தாக்குப் பிடிப்பது எப்படி? என்கிற கேள்வி ஏழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது

Updated On: 5 July 2023 3:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  2. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  3. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  6. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  7. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  8. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  9. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  10. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?